நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிடுவதாக விஜய் மக்கள் இயக்கம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் ஆதரவுடன் முதன்முறையாக வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

கட்சி சார்பு இல்லாத ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மொத்தம் 169 இடங்களில் போட்டியிட்டனர்.

அதில் போட்டியின்றி 13 பேர், போட்டியிட்டு 102 பேர் என மொத்தம் 115 பேர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற பிரதிநிதிகளை நடிகர் விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

தற்போது தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் பிப்.19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. பிப்.22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலைத் தொடர்ந்து தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் விஜய்யின் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, விஜய் மக்கள் இயக்கம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கம் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிடுவதாக அதன் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “விஜய் மக்கள் இயக்கம் எந்தக் கட்சியுடனும் கூட்டணியோ ஆதரவோ இல்லாமல் தனித்துப் போட்டியிடுகிறது. எனவே விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களுக்காக அனைத்து மாவட்ட தலைவர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும், ரசிகர்களும் முழுமூச்சுடன் பிரச்சாரம் செய்து விஜய் மக்கள் இயக்கத்தின் மூலமாக செய்த நற்பணிகளை மக்களிடம் கொண்டு சேர்த்து வேட்பாளர்களை வெற்றிபெற செய்யவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.