தமிழகத்தில் ஒமைக்ரான் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. எனினும், பொதுமக்கள் தவறாது தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை திருவல்லிக்கேணி வலாஜா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒமைக்ரான் கரோனா வைரஸ் தொற்று தீவிர சிகிச்சை பிரிவு வார்டை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில், சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்லூரி இயக்குநர் நாராயணபாபு, மருத்துவமனை டீன் ஆர்.ஜெயந்தி, ஒருங்கிணைப்பு அதிகாரி ரமேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்தியாவில் 21 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய சர்வதேச விமான நிலையங்களில் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. தமிழகத்தில்தான் 12 இடங்களில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

6 பேருக்கு டெல்டா பிளஸ்

தமிழகத்தில் ஒரு வாரத்தில் பல்வேறு நாடுகளிலிருந்து வந்த 5,858 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 6 பேருக்கு டெல்டா ப்ளஸ் தொற்று பாதிப்பு மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களின் சளி மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் கிடைத்த பிறகே என்னவிதமான தொற்று பாதித்திருக்கிறது என்பது தெரியவரும்.

முதல்வரின் அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் ஓமந்தூரார் மருத்துவமனை உட்பட மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பிரத்யேக சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி 80.44 சதவீதத்தினருக்கும், இரண்டு தவணை தடுப்பூசி 47.46 சதவீதத்தினருக்கும் போடப்பட்டுள்ளது. சனிக்கிழமை 14-வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகத்தில் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற உள்ளது.

அதிகமான அளவு தடுப்பூசி போடப்பட்ட இங்கிலாந்து, சிங்கப்பூர் நாடுகளில் தொற்று பாதிப்பு அதிகமிருந்தாலும் கூட, இறப்பு சசதவீதம் குறைவாகவுள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் தவறாது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.