நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் பேசுகையில் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் என இரண்டு இந்தியாவை உருவாக்க பாஜக முயற்சிக்கிறது என்று குற்றம் சாட்டினார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் மாநிலங்களவையில் நேற்று மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி பேசுகையில், ‘‘முன்பு ‘இந்தியாவே இந்திரா, இந்திராவே இந்தியா’ என்றும் ‘நாடுதான் காங்கிரஸ், காங்கிரஸ்தான் நாடு’ என்றும் காங்கிரஸார் கோஷமிட்டனர். இரண்டு இந்தியர்கள் இல்லை என்பதை புரிந்து கொள்ள இதுபோன்ற கோஷங்களின் மயக்கங்களில் இருந்து காங்கிரஸார் வெளியே வர வேண்டும். பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஊழல், கமிஷன், குடும்ப அரசியல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது’’ என்று தெரிவித்தார்.