சென்னை: கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தி:
முதல்வர் ஸ்டாலின்: கேரள மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி ஒரு சிறந்த அரசியல் ஆளுமை மற்றும் பொது சேவைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த உண்மையான மக்கள் தலைவர். அவரது குடும்பத்தினருக்கும், கேரள மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: மாணவர் காங்கிரஸ் தலைவராக, இளைஞர் காங்கிரஸ் தலைவராக, தொழிற்சங்க தலைவராக, கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக பல்வேறு தளங்களில் பணியாற்றி கட்சி வளர்ச்சிக்காக தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர். பொதுமக்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டு, அவர்களது பிரச்சினைகளை புரிந்து அதை தீர்த்துவைப்பதில் சிறப்பாக செயல்பட்டவர்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: அனைத்து சமுதாய மக்களின் நன்மதிப்பை பெற்றவர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது மிகுந்த மரியாதை கொண்டவர். அவர் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்துமன வேதனை அடைந்தேன்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: செண்பகவல்லி அணை, நியூட்ரினோ பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்திருக்கிறோம். குறிப்பாக நியூட்ரினோ குறித்து பேசிவிட்டு திரும்பியபோது, கேரள காவல் துறை பாதுகாப்போடு என்னை வழியனுப்பி வைத்தார்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தான் சார்ந்த இயக்கத்துக்கும், கேரள மக்களின் முன்னேற்றத்துக்கும் வாழ்நாள் முழுவதும் சிறப்பாக பணியாற்றியவர்.
திருநாவுக்கரசர் எம்.பி.: காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல் காந்தியின் நம்பிக்கைக்கு உரியவராக திகழ்ந்தவர் உம்மன்சாண்டி.
விசிக தலைவர் திருமாவளவன்: நாடறிந்த தலைவர். எளிமையே அவரது முதன்மையான அடையாளம்.
அமமுக பொதுச் செயலாளர்டிடிவி தினகரன்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் நட்பு கொண்டிருந்தவர். அவரது இழப்பு தென் மாநில மக்களுக்கு பேரிழப்பு.
மமக தலைவர் ஜவாஹிருல்லா: கேரளாவின் வளர்ச்சியில் உம்மன் சாண்டியின் பங்களிப்பு தவிர்க்க முடியாதது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.