பொது சிவில் சட்டத்தை பகுஜன் சமாஜ் கட்சி எதிர்க்கவில்லை. ஆனால் அதைவைத்து பாஜக செய்யும் அரசியலை எதிர்க்கிறது என்று மாயாவதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் கூறுகையில், “பகுஜன் சமாஜ் கட்சி பொது சிவில் சட்டத்தை எதிர்க்கவில்லை. ஆனால் பாஜக அதை அரசியல் செய்து அமலாக்கம் செய்ய எடுக்கும் முயற்சிகளை ஆதரிக்கவில்லை. இதனை அரசியலாக்கி வலுக்கட்டாயமாக நாட்டில் அமல்படுத்துவது சரியல்ல.

பொது சிவில் சட்டம் நிச்சயமாக நம் நாட்டை பலவீனமடையச் செய்யாது. மேலும் பொது சிவில் சட்டத்தால் நாட்டில் மத நல்லிணக்கம் வலுவடையும். அதேவேளையில் நம் நாட்டில் பல்வேறு நம்பிக்கைகள் கொண்டவர்கள், மதங்களைப் பின்பற்றுபவர்கள் வாழ்கின்றனர். அதையும் கவனத்தில் கொண்டு தான் செயல்பட வேண்டும். ஆகையால் இதை அமல்படுத்தும் முன்னர் பொது வாக்கெடுப்பு மூலம் கருத்து கேட்க வேண்டும்.

பாஜக இவ்விவகாரத்தில் அவசரம் காட்டுவது வேறு பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பும் முயற்சியே. எனவே அரசியல் செய்யாமல் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். இந்திய அரசியல் சாசன சட்டப்பிரிவு 44-ன் கீழ் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தலாம் என்றே கூறுகிறது” என்றார்