ஸ்காட்லாந்து யார்டு காவல் துறைக்கு இணையான தமிழக காவல்துறை, ஏவல்துறையாக மாறக்கூடாது. மாறினால், அதற்கான பலனை எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி மற்றும் பேளூர் பேரூராட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் வாழப்பாடியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, சேலம் புறநகர் மாவட்டஜெயலலிதா பேரவைச் செயலாளர்இளங்கோவன் தலைமை வகித்தார். கூட்டத்தில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி பேசியதாவது:

திமுகவின் 9 மாத ஆட்சியில்தமிழகம் இருண்ட மாநிலமாகிவிட்டது. சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. மக்களுக்கு எந்த பலனும்கிடைக்கவில்லை. நான் விரக்தியில் பேசுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறுகிறார். முதல்வராக நான் ஆசைப்பட்டதில்லை. முதல்வராக இருக்கும்போது எப்படி இருந்தேனோ அப்படித்தான் இப்போதும் இருக்கிறேன். ஏதோ சந்தர்ப்பவசத்தில் ஸ்டாலின் முதல்வராகிவிட்டார்.

“நீட் தேர்வை ரத்து செய்ய ஒரு ரகசியம் இருக்கிறது” எனஉதயநிதி கூறினார். அதனைப் பயன்படுத்தாமல் எங்களை ஏன் கூப்பிடுகிறீர்கள். மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு கொண்டு வந்து சாதனை படைத்தது அதிமுக.

அமைச்சர் நேரு தில்லுமுல்லு செய்து வெற்றி பெறலாம் என கூறியிருக்கிறார். குறுக்கு வழியில் வெற்றி பெறுவதற்கு எதற்காக தேர்தலை அறிவித்தீர்கள். அதிமுகவினரை சில இடங்களில் போலீஸார் மிரட்டுவதாக தகவல் வருகிறது. ஸ்காட்லாந்து யார்டு காவல் துறைக்கு இணையான தமிழக காவல்துறை, ஏவல்துறையாக மாறக்கூடாது. மாறினால், அதற்கான பலனை எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும்.

நாங்கள் சட்டத்தையும், காவல்துறையையும் மதிப்பவர்கள். எல்லை மீறி போனால், அதனை சந்திக்கும் துணிவு எங்களுக்கு உண்டு. ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்டஉயர் அதிகாரிகளை மாறுதல்செய்வதற்கான அதிகாரத்தை மத்திய அரசு எடுத்துக் கொள்ளலாம் என்ற நிலைப்பாடு இருக்கிறது.

அந்த நிலைப்பாடு வரும்போது,இப்படிப்பட்ட தவறு செய்ய முற்படுவோர் அதற்கான பலனை அனுபவிக்க வேண்டியது வரும். அதனால், யாரும் அப்படி செய்யமாட்டார்கள் என்று நினைக்கிறேன். உயர் பதவியில் இருப்பவர்கள், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உடையவர்களாக இருக்க வேண்டும். வேட்பாளரை மிரட்டுவது, பொய் வழக்கு போடுவது என்பதையெல்லாம் விட்டுவிட்டு, நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு பழனிசாமி பேசினார்.

கூட்டத்தில், அதிமுக எம்எல்ஏக்கள் சித்ரா (ஏற்காடு), ஜெயசங்கரன் (ஆத்தூர்), நல்லதம்பி (கெங்கவல்லி) உட்பட பலர் கலந்து கொண்டனர்.