இந்தியாவில் இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில்கள் தற்போது வரை 100 கி.மீ வேகத்தை கூட தாண்டவில்லை என்று தெரியவந்துள்ளது.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன அதிவேக ரயில்களை, ரயில்வே அமைச்சகம் 2019-ல் அறிமுகம் செய்தது. இந்த ரயிலில் இன்ஜின் தனியாக இல்லாமல் ரயிலுடன் இணைந்து இருக்கும். ரயிலில் தானியங்கி கதவுகள், ஏ.சி, வைஃபை, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ தகவல் வசதிகள், பயோ-கழிவறைகள் என பல நவீன வசதிகள் உள்ளன. சென்னையில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் இந்த வகையான ரயில் பெட்டிகள் தயார் செய்யப்பட்டன.

இதன் முதல் சேவை டெல்லி – வாரணாசி வழித்தடத்திலும், 2-வது சேவை டெல்லி – காஷ்மீரின் வைஷ்ணவி தேவி கோயில் வழித்தடத்திலும், 3-வது சேவை மும்பை – காந்தி நகர் வழித்தடத்திலும், 4-வது சேவை இமாச்சலப் பிரதேசம் உனாவின் அம்ப் அண்டவ்ரா – புதுடெல்லி வழித்தடத்திலும், 5-வது சேவை சென்னை – பெங்களூரு – மைசூரு வழித்தடத்திலும், 6-வது சேவை நாக்பூர் – பிலாஸ்பூர் வழித்தடத்திலும் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அதிபட்சமாக 180 கி.மீ வரை இயக்கும் திறன் கொண்ட வந்தே பாரத் ரயில்கள், தற்போது வரை 100 கி.மீட்டர் என்ற சராசரி வேகத்தை கூட தாண்டவில்லை என்பது தெரியவந்துள்ளது.