தமிழகத்தில் இந்த ஆண்டு காகிதமில்லா வடிவில் இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது. இதற்காக பேரவை அரங்கில், ஒவ்வொரு உறுப்பினர் மேஜையிலும் கணினிபொருத்தும் பணிகள் முடிக்கப்பட் டுள்ளன.

காகிதத்துக்காக ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான மரங்கள்அழிக்கப்பட்டு வருகின்றன. இயற்கையை பாதுகாக்கவும், செலவுகளைக் குறைக்கவும் தற்போது காகிதமில்லா நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசிலும் மின்னாளுமை முகமை மூலம் பல்வேறு மென்பொருட்கள் தயாரிக்கப்பட்டு துறைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

கடந்த 2018-ம் ஆண்டிலேயே ‘காகிதமில்லா சட்டப்பேரவை’ என்றதிட்டம் தொடங்கப்பட்டு, உறுப்பினர்களுக்கு கொள்கை விளக்க குறிப்புகள், அறிக்கைகள், கேள்வி – பதில்கள் உள்ளிட்ட விவரங்கள் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டன. அதேபோல் பல்வேறு நிறுவனங்களின்ஆண்டறிக்கைகளும் கணினி வாயிலாக அனுப்பப்பட்டன.

தமிழகத்தில் இதுவரை காகித வடிவில்தான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்கூட காகித வடிவிலேயே இருந்தது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, காகித பயன்பாட்டை குறைக்கும் வகையில், இந்த ஆண்டு இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். இதன்மூலம் ரூ.1 கோடி வரைமிச்சமாகும் என்பதுடன், பல ஆயிரக்கணக்கான மரங்களும் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், 2021-22 நிதிஆண்டுக்கான தமிழக அரசின் முழுமையான பட்ஜெட், வரும் 13-ம் தேதிதாக்கல் செய்யப்பட உள்ளது. முதல்முறையாக, இந்த ஆண்டு காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை சட்டப்பேரவைச் செயலகம் செய்து வருகிறது.

‘ஆல் இன் ஒன்’ கணினி

அதன்படி, கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டம் நடக்க உள்ள அரங்குக்குள் உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் இருக்கை முன்பும்மேஜையில் சிபியுவை உள்ளடக்கிய ஆல்-இன்-ஒன் கணினி பொருத்தப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் மட்டுமின்றி பேரவைத் தலைவர், அதிகாரிகள் இருக்கைகள் என அனைத்திலும் இந்த கணினி பொருத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேரவைச் செயலக அதிகாரிகள் கூறியதாவது:

நாட்டிலேயே முதன்முதலில் இமாச்சல பிரதேச அரசு, சில ஆண்டுகளுக்கு முன்பே மின்னனு பட்ஜெட்(இ-பட்ஜெட்) தாக்கல் செய்துவிட்டது. ஒடிசா, கேரளா ஆகிய மாநிலங்களும் தற்போது முழுமையாக மின்னணு முறைக்கு மாறிவிட்டன. தமிழகத்தில் காகிதமில்லா சட்டப்பேரவை செயல்பாடுகள் 3 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டாலும், இந்த முறைதான் மின்னணு முறையில் பட்ஜெட் தாக்கலாகிறது.

ஆக.13-ம் தேதி காலை 10மணிக்கு பேரவை கூடியதும், பட்ஜெட்டை நிதியமைச்சர் வாசிக்கும்போது, அவர் வாசிக்கும் வரிகள், அப்படியே திரையில் தெரியும். அதேநேரம், உறுப்பினர்கள் முன்வைக்கப்பட்டிருக்கும் ‘டேப்’ கணினியில், முழு பட்ஜெட்டும் ‘பிடிஎஃப்’ வடிவில் பதிவிடப்பட்டிருக்கும். அதையும் அவர்கள் பார்த்துக் கொள்ளலாம். மேலும், பேரவை அரங்கின் உள்ளேயும், வெளியிலும் பெரிய திரைகளில் பட்ஜெட் வெளியாகும். காகித வடிவிலும் குறைந்த அளவில்பட்ஜெட் அச்சடிக்கப்படும். பத்திரிகைகள், ஊடகங்கள் மற்றும் கேட்கும் உறுப்பினர்களுக்கு அவைவழங்கப்படும்.

எம்எல்ஏக்களுக்கு பயிற்சி

இது முதல் முயற்சிதான். இந்தமுயற்சி அடுத்தடுத்த நிலைகளிலும் தொடரும். இதற்காக 380 கணினிகள், ‘டேப்’கள் வாங்கப்பட்டுள்ளன. ஆக.14-ம் தேதி தாக்கலாகும் வேளாண் பட்ஜெட்டையும் இதே முறையில் தாக்கல் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. கணினிமற்றும் டேப் பயன்படுத்துவது தொடர்பாக உறுப்பினர்களுக்கு சில தினங்களில் எம்எல்ஏ விடுதியில் பயிற்சி அளிக்கப்படும். அனைத்து உறுப்பினர்களும் முழுமையாக தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வரை காகித வடிவிலான பட்ஜெட் அச்சடிப்பதும் தொடரும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித் தனர்.

நள்ளிரவில் சுதந்திர தின சிறப்பு விழா

திமுக அரசு பொறுப்பேற்று ஆக.14-ம் தேதியுடன் 100 நாட்கள் நிறைவடைகிறது. அன்று காலை சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. மறுநாள் ஆக.15-ம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இது 75-வது சுதந்திர தினம் என்பதால், 14-ம் தேதி நள்ளிரவில் சட்டப்பேரவையிலேயே சுதந்திர தினசிறப்பு விழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதில், நாட்டு விடுதலைக்காக உயிர்நீத்த தியாகிகளின் நினைவாகமவுன அஞ்சலியும் செலுத்தப்படஉள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன், நாட்டின் 25-வதுமற்றும் 40-வது சுதந்திர தினத்தின்போதும் நள்ளிரவில் சிறப்பு விழா நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.