இந்தியாவின் மாரியப்பன் தங்கவேலு 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தையும் மற்றொரு இந்திய வீரர் சரத் குமார் 1.83 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர். இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது
பாராலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் பிரிவில் இந்தியாவின் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கத்தையும் மற்றொரு இந்திய வீரர் சரத் குமார் வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 24ம் தேதி தொடங்கிய பாராலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பாரா ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நிறைவுபெற இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், இதுவரை இந்தியா 2 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என 8 பதக்கங்களை வென்றிருந்தது.
இந்நிலையில், ஆடவர் உயரம் தாண்டுதல் (டி63) போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் தமிழகத்தின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு பங்கேற்றார். ஏற்கனவே, கடந்த 2016ம் ஆண்டு ரியோவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் பிரிவில் 1.89 மீட்டர் உயரத்தை தாண்டி அவர் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.
இதனால் இன்றைய போட்டியில் எப்படியும் மாரியப்பன் தங்கவேலு தங்கப்பதக்கத்தை வென்றுவிடுவார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்திருந்தது. இந்நிலையில், இன்றைய உயரம் தாண்டுதல் பிரிவு ஆட்டத்தில் மாரியப்பன் தங்கவேலு முதலில் முதலிடத்தில் இருந்த நிலையில், அமெரிக்காவின் க்ரிவி சாம் அவரை முந்தி முதலிடம் பிடித்தார். 1.91 மீட்டர் உயரம் தாண்டி அவர் தங்கப் பதக்கத்தை பெற்றார்.
இந்தியாவின் மாரியப்பன் தங்கவேலு 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தையும் மற்றொரு இந்திய வீரர் சரத் குமார் 1.83 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர். இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.