தமிழகத்தில் மண்பாண்டம் செய்பவர்கள், செங்கல் சூளை வைத்திருப்பவர்கள், நில மேம்பாடு மற்றும் சாலைப் பணிக்கு மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில், கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய, பாப்பிரெட்டிபட்டி தொகுதி அதிமுக உறுப்பினர் ஏ.கோவிந்தசாமி, ‘‘மண்பாண்டம் செய்வதற்கும், செங்கல் சூளைக்கும், சாலைப் பணிகளுக்கும், கட்டிடப் பணிகளுக்கும் மண் எடுப்பது, விவசாயிகள் வண்டல் மண் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. மண்பாண்டம் செய்வதற்கு 800 வண்டிஎடுக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்டஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம்’’ என்றார்.
இதற்கு பதில் அளித்து நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:
தமிழகம் முழுவதும் மண்பாண்டம் செய்பவர்கள், செங்கல் சூளை வைத்திருப்பவர்கள், நிலம் மேம்படுத்த வண்டல் மண் எடுக்கும் விவசாயிகள், சாலை மேம்படுத்த மண் எடுப்பவர்களுக்கு தற்போது அதற்கான சூழல் இல்லாத காரணத்தால், கோரிக்கை வைத்தார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பிரச்சினை தீர்க்கப்படும் என்று தேர்தல் காலத்தில் தற்போதைய முதல்வர் கூறியிருந்தார். அந்த பிரச்சினை இப்போது தீர்க்கப்பட்டுள்ளது.
மண் எடுப்பதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் கடந்த பிப்.12-ம்தேதி தீர்ப்பு வந்தது.
மண் எடுக்க அனுமதிக்கும் முன்பு, கனிமத்தில் உள்ள கூறுகளை அறிய அனுமதிக்கப்பட்ட ஆய்வுக் கூடங்களில் மண்ணைபரிசோதிக்க வேண்டும். குத்தகைஒப்பந்தம் செய்யப்பட வேண்டும்.சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
சுற்றுச்சூழல் அனுமதிக்கு சென்றால் இப்போதைக்கு வராது. ஆனால், அரசுக்கே சாலைப் பணி, அணை கட்ட, கட்டிடப் பணிகளுக்கு மண் தேவைப்படுகிறது. எனவே, சாலைப் பணிகள், கட்டிடப் பணிகள் தடையின்றி நடைபெற, சுற்றுச்சூழல் அனுமதியின்றி மண்எடுக்க அனுமதி வழங்கி, கடந்தஜூலை 30-ம் தேதி அரசு உத்தரவிட்டது.
அனுமதி தேவை இல்லை
மேலும், முதல்வருடன் ஆலோசித்து, தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகளில் திருத்தம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் விளைவாக, நிலப்பரப்புக்கு கீழ் ஒன்றரை மீட்டர் அளவுக்கு மண் எடுக்கலாம். அது சுரங்கப் பணிக்குள் வராது. சுற்றுச்சூழல் அனுமதி பெறவும் தேவையில்லை. செங்கல் சூளை வைத்திருப்பவர்கள் அரசுக்கு உரியகட்டணம் செலுத்த வேண்டும்.
எனவே, மண்பாண்டம் செய்பவர்கள், செங்கல் சூளை வைத்திருப்பவர்கள் நில மேம்பாட்டுக்கு மண் எடுப்பவர்கள், சாலைப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு மண் எடுக்க முதல்வர் அனுமதி அளித்துள்ளார்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.