பேராசிரியர் அன்பழகனார் மேம்பாட்டு திட்டத்தில் இந்தாண்டு தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 18 ஆயிரம் வகுப்பறைகள் கட்டப்படும் என்று திருச்செந்தூரில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் நேற்று மாலை அவர் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 6 -ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகள் உயர்படிப்பு, பட்டயம், பட்டபடிப்பு படிக்கச் செல்லும் போது, மாதந்தோறும் ரூ.1,000 அவர்களது கணக்கில் செலுத்தப்படும் திட்டத்தை முதல்வர் அறிவித்துள்ளார். இதன்மூலம் அதிகப்படியான மாணவிகள் உயர் கல்வி கற்பதோடு அரசு பள்ளியில் படிப்பதற்கு பெற்றோர்கள் அனுப்பி வைப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

கரோனா தாக்கம் காரணமாக பள்ளிகள் தாமதமாகத் தான் திறக்கப்பட்டுள்ளன. மே 5-ம் தேதி முதல் 28 -ம் தேதி வரை தேர்வு நடக்கிறது. மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிப்பது தொடர்பாக துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த பின்னர் தான் சொல்ல முடியும்.

பேராசிரியர் அன்பழகனார் மேம்பாட்டு திட்டத்தில் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு ரூ.7 ஆயிரம் கோடி .நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். முதல் கட்டமாக இந்தாண்டு ரூ.1,300 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். இதன் மூலம் பள்ளிகளில் 18 ஆயிரம் வகுப்பறைகள் கட்டப்படும்.

இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.