தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தமிழக அரசையும், கோவை மாநகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து, ஒருங்கிணைந்த கோவை மாவட்ட அதிமுக சார்பில், தெற்கு தாலுகா அலுவலகம் அருகே, நேற்று (டிச.17) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தலைமை வகித்துப் பேசினார். இதில் அதிமுக எம்எல்ஏக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக, உதவி ஆய்வாளர் ரஜினிகாந்த், ரேஸ் கோர்ஸ் போலீஸில் புகார் அளித்தார்.

அதில், ”கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள சூழலில், அதை மீறும் வகையில், தடையை மீறி ஒன்று கூடி, தொற்றுப் பரவலை அதிகரிக்கும் வகையில் கூட்டத்தைச் சேர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறப்பட்டு இருந்தது.

எம்.எல்.ஏக்கள் மீது வழக்குப் பதிவு

இந்த புகாரின் அடிப்படையில், ரேஸ்கோர்ஸ் போலீஸார், அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, எம்.எல்.ஏக்கள் அம்மன் கே.அர்ச்சுணன், கே.ஆர்.ஜெயராம், பி.ஆர்.ஜி.அருண்குமார், ஏ.கே.செல்வராஜ், அமுல் கந்தசாமி, தாமோதரன், கந்தசாமி, தனபால் மற்றும் கட்சி நிர்வாகிகள் கல்யாணசுந்தரம், எட்டிமடை சண்முகம், அவிநாசி கருப்பசாமி, மகேஸ்வரி, கஸ்தூரி வாசு, ஓ.கே.சின்னராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் மீது 143, 314, 269 தடையை மீறி ஒன்று கூடுதல், கூட்டத்தைச் சேர்த்தல், தொற்று நோய் பரவல் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.