ஏழ்மை நிலையில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மையமாக வைத்து மத்திய, மாநில அரசுகள் திட்டங்களை வகுக்கின்றன.
அடித்தட்டு மக்களின் வாழ்க்கைக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும், அவர்களை சென்றடைகிறதா? என்பதை கண்காணிக்க, ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் மாவட்ட அளவில் உள்ள ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பித்து தமிழக அரசு செயல் வடிவம் கொடுத்துள்ளது. இதேபோல், அமைச்சர்கள் மற்றும் ஆட்சியர்கள் தலைமையில் ஆய்வு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
துறை வாரியான ஆய்வு கூட்டங்களும் நடைபெறுகின்றன. மேலும், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் நடத்தப்படுகின்றன. இக்கூட்டங்களில் மத்திய, மாநில அரசு திட்டங்களின் செயல்பாடுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். ஆய்வுக் கூட்டங்களில், திட்டப் பணியில் தொய்வு ஏற்பட காரணமாக உள்ள அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்களிடம் அமைச்சர் மற்றும் ஆட்சியர் உள்ளிட்டோர் கண்டிப்பு காண்பிக்க நேரிடும்.
திட்ட பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் மற்றும் துறை வாரியான ஆய்வு கூட்டங்களில், அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் செய்துள்ள தவறுகளை சுட்டிக் காட்டி, அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளும் நிகழ்வுகளும் இடம்பெறும். துறை ரீதியிலான கூட்டங்களில் துறை அமைச்சர், அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மட்டும் பங்கேற்பார்கள்.
அரசு திட்டங்கள் தொடர்பான ஆய்வு கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் உள்ளாட்சி பிரநிதிகள் பங்கேற்கலாம். அந்நியர்களுக்கு அனுமதி கிடையாது. செய்தி சேகரிக்கும் செய்தியாளர்களுக்கும் அனுமதியில்லை. இந்நிலையில், மாவட்ட அளவில் அமைச்சர் தலைமையில் நடைபெறும் ஆய்வு கூட்டங்களில் அரசியல் கட்சியினரும் இடம்பெறுவது கடந்த பல ஆண்டுகளாக தொடர்கிறது.
திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் சமீபத்தில் நடைபெற்ற நான்கு நகராட்சிகளில் நடைபெறும் அரசு திட்டங்கள் தொடர்பான ஆய்வு கூட்டத்தில் அரசியல் கட்சியினர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் செய்தியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இது குறித்து ஆட்சியர் அலுவலகம் தரப்பில் கேட்டபோது, “ஆட்சியர் தலைமையில் துறை ரீதியாக நடைபெறும் கூட்டங்களில் அரசு அதிகாரிகள், அலுவலர்கள் மட்டுமே பங்கேற்கின்றனர். அரசு திட்ட பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டங்களில் மக்கள் பிரநிதிதிகள் பங்கேற்கின்றனர். அவர்களுடன் வரும் அரசியல் கட்சியினரும் அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுடன் இணைந்து இருக்கையில் அமர்ந்து விடுகின்றனர்.
அவர்களை பங்கேற்கக்கூடாது என நேரிடையாக கூறும் சூழல் இல்லை. அரசியல் கட்சியினர் முன்னிலையில், தவறுகளை சுட்டிக்காட்டி அரசு அலுவலர்களிடம் கண்டிப்பு காட்டும்போது, சங்கடமாக உள்ளது. ஆய்வு கூட்டங்களுக்கு உள்ள முக்கியத்துவத்தை உணர்ந்து, அரசியல் கட்சியினர் பங்கேற்பதை தவிர்க்க, மக்கள் பிரதிநிதிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்றனர்.