இந்தியாவிடமிருந்த கச்சத்தீவு இலங்கைக்கு கைமாறி ஜூன் 28-ம் தேதியுடன் 49 ஆண்டுகளை நிறைவுசெய்கிறது. அத்தீவை மீண்டும் இந்தியா தன்வசப் படுத்துமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ராமேசுவரத்திலிருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவிலிருந்து 8 கடல் மைல் தொலைவிலும், பாக் நீரிணையில் அமைந்துள்ளது கச்சத்தீவு. இதன் மொத்த பரப்பளவு 285 ஏக்கர். இதன் அதிகபட்ச அகலமே 300 மீட்டர்தான். ராமேசுவரத்திலிருந்து சுமார் இரண்டரை மணி நேரத்திலும், இலங்கையின் நெடுந்தீவு மற்றும் தலைமன்னாரிலிருந்து சுமார் ஒன்றரை மணி நேரத்திலும் இத்தீவை படகு மூலம் அடையலாம்.

ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்குச் சொந்தமான கச்சத்தீவை, மண்டபத்தைச் சேர்ந்த மரைக்காயர்கள் குத்தகைக்கு எடுத்து, முத்துக்கள் மற்றும் மீன்பிடிப்புக்காகப் பயன்படுத்தி வந்தனர். 1972-ல் தமிழக அரசால் பதியப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட கெஸட்டியரில், கச்சத்தீவை ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு பகுதியாகவும், இத்தீவின் சர்வே எண் 1250 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாரை வார்ப்பு: 1974 ஜூன் 28 அன்று இந்திய – இலங்கை அரசுகளுக்கு இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில், இரு நாடுகளுக்கும் இடையிலான கடல் எல்லைக் கோடு வரையறுக்கப்பட்டது. இதன்மூலம் கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில், இந்திய மீனவர்களின் மீன்பிடிக்கும் உரிமையும், கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத்துக்கு பக்தர்கள் பாஸ் போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் இன்றி சென்றுவரும் உரிமையும் குறிப்பிடப்பட்டிருந்தன.

கச்சத்தீவு கைமாறி 50 ஆண்டுகளான நிலையில், இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்பது குறித்து ஏஐடியுசி மீனவர் சங்க மாநிலச் செயலாளர் செந்தில்வேல் கூறியதாவது: கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கடந்த 49 ஆண்டுகளில், இந்திய- இலங்கை சர்வதேச கடல் எல்லையைத் தாண்டியதாக, இதுவரை 360 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

பலமுறை இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளது. இதில் ஏராளமான மீனவர்கள் உடலுறுப்புகளை இழந்துள்ளனர். நூற்றுக்கணக்கான படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கச்சத்தீவில் தமிழக மீனவர்களுக்கு உள்ள உரிமைகளை இலங்கை அரசு மறுத்து வருவதுடன், கச்சத்தீவை தங்களுடைய ராணுவ முகாமாக மாற்றுவதற்கும், இந்தியர்களின் வழிபாட்டு உரிமைகளைப் பறிக்கும் வகையில் அந்தோணியார் தேவாலயத்துக்கு அருகே புத்தர் ஆலயத்தையும் நிறுவியது.

காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளுக்குமே கச்சத் தீவை மீட்க வேண்டும் என்ற நோக்கம் கிடையாது. அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளுமே கச்சத் தீவு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடுவது அல்லது கடிதங்கள் மூலம் மத்திய அரசை வலியுறுத்துவது போன்ற நடவடிக்கைகளைத்தான் செய்து வருகின்றன. வெளிநாட்டுக் கொள்கையில் நம்நாட்டு நீதிமன்றங்கள் தலையிடவும் முடியாது.

கச்சத்தீவை ஒப்பந்தம் மூலம் இலங்கையிடம் வழங்கப்பட்டதற்கு இந்திய நாடாளுமன்றத்தில் முறையான சட்டம் இயற்றப்படவில்லை. இதனால், கச்சத் தீவை இலங்கைக்கு வழங்கியது செல்லாது என ஐ.நா. சர்வதேச சபையின் மூலம் வாதாடி மீட்க வேண்டும் என்றார்.