சென்னை: தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிஐ கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. கூடுதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ மகளிர் நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ளது. ஹெரன்பால், அருளானந்தம், பாபு ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சி வழக்கில் முன்னதாக கைது செய்யப்பட்ட 5 பேர் மீது ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது சிபிஐ.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை தினமும் விசாரித்து விசாரணையை 6 மாதத்தில் முடிக்க கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிளைப் பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வீடியோ வெளியாகி தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சகோதரர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், பொள்ளாச்சி அதிமுக நகர மாணவரணிச் செயலாளர் அருளானந்தம், ஹேரேன் பால், பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ விரைந்து முடிக்கத் தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும், குறிப்பாக எஸ்.பி. அந்தஸ்திலான ஒரு அதிகாரியை நியமித்து உதவத் தயாராக இருப்பதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சிபிஐயின் விசாரணைக்கு உதவும் வகையில் சிபிசிஐடி எஸ்.பி. முத்தரசி நியமிக்கப்பட்டுள்ளார்.