ஜனவரி 29-ம் தேதி தொடங்குவதாக இருந்த முதுகலை பட்டதாரிஆசிரியர் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அத்தேர்வு பிப்ரவரி 12 முதல் 20 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் ஜி.லதா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான கணினிவழி தேர்வு ஜனவரி 29 முதல் பிப்ரவரி 6-ம் தேதி வரை நடைபெறும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது நிலவும் பெருந்தொற்று சூழ்நிலை மற்றும் நிர்வாக காரணங்களால் பிப்ரவரி 12 முதல் 20-ம்தேதி வரை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. விரிவான தேர்வு அட்டவணை 15 நாட்களுக்கு முன்பு வெளியிடப்படும்.

தேர்வுக்கான நுழைவுச்சீட்டை தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்வு தேதிகள் நிர்வாககாரணங்கள், பெருந்தொற்று சூழ்நிலையை பொறுத்து மாறுதலுக்கு உட்பட்டது என கூறப்பட்டுள்ளது.