ஏற்காட்டில் கோடை விழாவுக்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பூங்காவில் மலர்க்கண்காட்சியில் வைப்பதற்கான மலர் சிற்ப உருவத்தை அமைக்க, சுற்றுலாப் பயணிகளிடம் கருத்துகள் பெறப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஏற்காட்டில், ஆண்டுதோறும் கோடைகாலத்தில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில், கோடை விழா மலர்க்கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இதனைக் காண்பதற்கு தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் பல ஆயிரம் பேர் வந்து செல்வர்.
இந்நிலையில், கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக ஏற்காட்டில் கோடைவிழா மலர்க்கண்காட்சி நடத்தவில்லை. தற்போது, ஏற்காட்டில் கோடைவிழா மலர்க்கண்காட்சியை இம்மாத இறுதியில் நடத்த ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.
மலர்க்கண்காட்சி நடைபெறும் இடமான ஏற்காடு அண்ணா பூங்காவில் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில், பால்செம், ஜீனியா, கிரைசாந்திமம், பெகோனியா, சால்வியா, காஸ்மாஸ், கார்நேசன் உள்பட 40 வகையான மலர்ச் செடிகளை உற்பத்தி செய்வதற்கு, 2 லட்சம் விதைகள், 10,000 மலர்தொட்டிகளில் ஊன்றப்பட்டுள்ளன.
மேலும், ஏற்காடு ரோஜா எனப்படும் டேலியா வகைப் பூக்களைக் கொண்டு, மலர் அரங்கம் அமைப்பதற்காக, கொல்கத்தாவில் இருந்து 4,000 டேலியா மலர் நாற்றுகள் விமானத்தில் கொண்டு வரப்பட்டு, ஏற்காட்டில் நடவு செய்து, பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், பூங்காவினுள் இருக்கும் செயற்கை நீருற்றுத் தொட்டியை புதுப்பிப்பது, புல்வெளிகளை சீரமைப்பது உள்பட பூங்காவை அழகூட்டும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இதனிடையே, கோடை விழாவின் ஹைலைட்டான, மலர்க்கண்காட்சியில் மலர்களைக் கொண்டு அமைக்கப்படும் பிரம்மாண்டமான மலர் சிற்பங்களை அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. கடந்த காலங்களில், விமானம், கழுகு, குவளையில் இருந்து நீர் கொட்டுவது, செல்ஃபி ஸ்பாட் உள்ளிட்ட வடிவங்களில், பிரம்மாண்டமான மலர்ச்சிற்பங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், நடப்பாண்டு மலர்க்கண்காட்சியில் என்னென்ன வடிவங்களில் மலர்ச்சிற்பங்களை அமைக்கலாம் என்பது குறித்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, எந்தெந்த வடிவங்களில் மலர்ச் சிற்பங்களை அமைக்கலாம் என கருத்து தெரிவிக்க, வசதியாக, அண்ணா பூங்கா நுழைவு வாயிலில், பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், தங்கள் கருத்துகளை, அங்கு வைக்கப்பட்டுள்ள வெள்ளைத்தாளில் எழுதி, பெட்டியில் போட்டு வருகின்றனர். சுற்றுலாப் பயணிகள் தெரிவிக்கும் கருத்துகளையும் ஆலோசித்து, மலர்ச் சிற்பங்கள் வடிவமைக்கப்பட உள்ளதாக தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோடை விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதால், சுற்றுலாப் பயணிகளும் ஏற்காடு மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.