சென்னை, திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, கோவை உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் ஆருத்ரா கோல்டு நிறுவனம், தங்கள் நிறுவனத்தில் ரூ.1 லட்சம்முதலீடு செய்தால், மாதம் ரூ.36 ஆயிரம் வீதம் 10 மாதம்பணம் தருவதுடன், 2 கிராம் தங்ககாசு தருவதாக விளம்பரம் செய்துள்ளது. இதை நம்பி ஆயிரக்கணக்கானோர், கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர். எனினும், உறுதி அளித்தபடி அந்நிறுவனம் பணம் வழங்கவில்லை.

இதேபோல, ஹிஜாவு அசோசியேட்ஸ் நிறுவனமும், முதலீடுகளுக்கு 15 சதவீதம் வட்டி தருவதாக விளம்பரம் செய்தது. இதை நம்பி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், ரூ.800 கோடி வரை முதலீடு செய்து ஏமாந்தனர்.

வேலூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய ஐஎஃப்எஸ் நிதி நிறுவனமும் கோடிக்கணக்கில் முதலீடு பெற்று, அதை திருப்பிக் கொடுக்கவில்லை. இவ்வாறு மொத்தம் ரூ.10 ஆயிரம் கோடி வரை முதலீடு பெற்று, மோசடி செய்யப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து விசாரித்து வரும் பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸார், ஆருத்ரா கோல்டு நிறுவன நிர்வாகிகள் சென்னை மேத்தா நகர் ராஜசேகர், விருதுநகர்மைக்கேல்ராஜ், திருவள்ளூர் முகப்பேர் கிழக்கு உஷா, ஐஎஃப்எஸ் நிறுவனத்தைச் சேர்ந்த வேலூர் மோகன் பாபு, லட்சுமி நாராயணன் வேதநாராயணன், ஜனார்தனன், ஹிஜாவு நிறுவனத்தைச் சேர்ந்தபுது பெருங்களத்தூர் அலெக்ஸாண்டர், மகாலட்சுமி பரந்தாமன், அம்பத்தூர் சுரேஷ், பெங்களூரு இனியா, சென்னை சுஜாதா காந்தா, அடையாறு கவுரி சங்கர்,வேளச்சேரி சந்திர சேகரம் பிரிஸ்டில்லா, கலைச்செல்வி ஆகியோரை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்துள்ளனர்.