சென்னை: தனியார் மற்றும் அரசு உதவி பெறும்பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என ஏற்கெனவே விதிகள் வகுக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

சென்னை செம்பியத்தைச் சேர்ந்தஜி.தேவராஜன் என்பவர், 2017-ம்ஆண்டு உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனுவில், ‘பெரம்பூரி்ல் உள்ள டான்பாஸ்கோ பள்ளியில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதால், அந்த பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதிஎஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர்அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளி கல்வித்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பதில் மனுவில், ‘டான் பாஸ்கோ பள்ளியில் விதிமீறல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித் துறைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக கட்டணம் வசூலிக்கக் கூடாது என கடந்த 2018-ம்ஆண்டே விதிகள் வகுக்கப் பட்டுள்ளன’ என தெரிவிக்கப்பட்டது.

குற்றச்சாட்டு தொடர்பாக கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள், வழக்கு விசாரணையை செப்.21-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.