செம்மரக் கடத்தல் பின்னணியைக் கதையம் சமாகக் கொண்ட ‘புஷ்பா : தி ரைஸ்’ பாகம் – 1 ’ இந்த ஆண்டின் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்று. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் 17-ம் தேதி வெளியாகிறது. ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தண்ணா, ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், கிஷோர், சுனில், அஜய் கோஷ், ஹரீஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

அல்லு அர்ஜுனின் படங்களுக்கு வடக்கிலும், மலையாளத்தில் வரவேற்பு இருப்பதால் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியாகிறது.

படம் குறித்து சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அல்லு அர்ஜுன், ‘‘நான்கு படங்களுக்குச் சமமான ஒரு படம் ‘புஷ்பா’. படத்துக்காக இவ்வளவு கஷ்டப்பட்டேன் என்று சொல்வது பொதுவாக எனக்குப் பிடிக்காது. நான் கஷ்டப்பட்டு நடிப்பதில்லை, இஷ்டப்பட்டு நடிக்கிறேன். ஆனால், படக்குழு இப்படத்துக்காக பட்ட கஷ்டம் அதிகம். இயக்குநர் சுகுமார் உள்ளிட்ட மொத்தக் குழுவும் காட்டுக்குள் மிகக் கடினமாக உழைத்திருக்கிறார்கள்.

தமிழில் ஜெயிக்க வேண்டும் என்பது எனது கனவு. ‘புஷ்பா’ படப் பாடல்கள் அமோக வரவேற்பைப் பெற்றதும் அவ்வளவு சந்தோஷப்பட்டேன். தமிழில் ஜெயித்தால்தான் என் வாழ்வு முழுமையடையும். இங்கிருந்து எனக்குப் பாராட்டு கிடைத்தால் ரொம்ப சந்தோஷப்படுவேன். புஷ்பா அதைச் செய்யும். தமிழில் படம் செய்ய வேண்டும், தமிழ் இயக்குநர்களுக்காக நடிக்க நான் ரெடி’’ என்று உற்சாகம் பொங்கப் பேசினார்.