பாஜக ஆட்சியில் நடுத்தர வர்க்க மக்கள் சாலையில் செல்வதே பெரும்பாடாகிவிட்டது என்று பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் உயர்த்தப்பட்டது. இரு எரிபொருளிலும் லிட்டருக்கு 35 பைசா உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

விமானங்களுக்குப் பயன்படும் எரிபொருள் விலையைவிட வாகனங்களுக்குப் பயன்படுத்தும் எரிபொருள் விலை 30 சதவீதம் உயர்ந்துவிட்டது.

நாட்டின் தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.105.84 ஆகவும், மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.111.77 ஆகவும் உயர்ந்துள்ளது. மும்பையில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.102.52 ஆகவும், டெல்லியில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.57 ஆகவும் அதிகரித்துள்ளது.

நாட்டின் அனைத்து மாநிலத் தலைநகரங்களிலும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100-க்கு மேல் உள்ளது. 12க்கும் மேற்பட்ட மாநிலங்களில் மற்றும் யூனியன் பிரதேசங்களில் டீசல் விலை ரூ.100-ஐத் தாண்டி உச்சத்தை எட்டியுள்ளது. இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பெட்ரோல், டீசலுடன் விமான டர்பைன் எரிபொருள் விலையை ஒப்பிட்டு ஒரு செய்தித்தாள் கிளிப்பிங்கை இணைத்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இதுகுறித்து இன்று தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:

”ஹவாய் செருப்புகள் அணிந்த மக்கள் விமானத்தில் பயணம் செய்வார்கள் என்றெல்லாம் பாஜக அரசு உறுதியளித்தது. ஆனால், பாஜக அரசு பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை அதிகப்படுத்தியதால், இப்போது ஹவாய் செருப்பு அணிந்தவர்களும், நடுத்தர வர்க்கத்தினரும் சாலையில் பயணம் செய்வதே பெரும்பாடாகிவிட்டது.

பாஜக விலையுயர்ந்த நாட்களைக் கொண்டுவந்துவிட்டது. டெல்லியில் விமான எரிபொருள் விலை லிட்டருக்கு ரூ.79, ஆனால் பெட்ரோல் விலையோ லிட்டருக்கு ரூ.105.84”.

இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

ராகுல் கண்டனம்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் விலை உயர்வு செய்தியைப் பற்றிக் குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, ”வரிகள் அதிகரித்திருக்காவிட்டால், பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.66, ரூ.55 ஆக இருந்திருக்கும். மக்கள் வீழ்ச்சியடையும் நிலையில், விலை உயர்வு அதிகரித்துள்ளது” என்று ட்வீட் செய்துள்ளார்.