ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கூடுதல் டிஜிபி வினித் தேவ் வான்கடே, ஐஐடி தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்டோர் இந்த்க குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

 

இணையதள சேவைகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாள்தோறும் பன்மடங்கு அதிகரித்து வரும் நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது. முந்தைய ஆட்சியாளர்களால் கடந்த 25-2-2021 அன்று ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு எதிராகச் சட்டம் ஒன்று இயற்றப்பட்டது.
இந்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி சில நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, கடந்த 3-8-2021 அன்று வழங்கிய தீர்ப்பில், இச்சட்டம் போதுமான காரணங்கள் மற்றும் ஆதாரங்களின்றி பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, அதனை ரத்து செய்தது.

மேலும், இச்சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தபோது, அச்சட்டம் நிறைவேற்றப்படுவதற்கான அறிவியல்பூர்வமான தரவுகளை விளக்கத் தவறியதாகவும் கருத்து தெரிவித்திருந்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் 13-11-2021 அன்று தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு இதுவரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

மேலும், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட சட்டங்களும் அந்தந்த மாநில உயர்நீதிமன்றங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டின்பால் ஈர்க்கப்பட்டு, அதில் பணத்தை இழந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் துயரமான நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

இதுதொடர்பாக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில்,
❖ ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் ஏற்படக்கூடிய நிதியிழப்பு மற்றும் தற்கொலை உள்ளிட்ட பெரும் ஆபத்தை விளைவிக்கும் தன்மையைக் கண்டறியவும்;
❖ இவ்விளையாட்டுகளினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை உரிய தரவுகளுடன் ஆராயவும்;
❖ இவ்விளையாட்டுகளை விளையாடத் தூண்டும் விளம்பரங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களை கூர்ந்தாய்வு செய்து, அவற்றை உரிய முறையில் கட்டுப்படுத்தவும்,
இரண்டு வாரங்களுக்குள் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளிக்க சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு தலைமையில், ஐஐடி தொழில்நுட்ப வல்லுநர் சங்கரராமன், ஸ்நேஹா அமைப்பின் நிறுவனரும் உளவியலாளருமான டாக்டர் லட்சுமி விஜயகுமார், காவல்துறை கூடுதல் இயக்குநர் வினித் தேவ் வான்கடே உள்ளிட்டோர் அடங்கிய குழு ஒன்றை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

மேற்குறிப்பிட்ட குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் இச்சமூகப் பிரச்சனைக்கு உடனடித் தீர்வு காண வேண்டிய அவசியம் கருதி, அவசரச் சட்டம் விரைவில் இயற்றப்படும். இதன் மூலம் இச்சட்டம் பிற மாநிலங்களுக்கும் வழிகாட்டிடும் வகையில் முன் மாதிரிச் சட்டமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண் ஒருவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையானதோடு பல லட்சம் கடன் ஏற்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த செப்டம்பர் மாதம் சென்னை அரசு விருந்தினர் மாளிகை அருகே பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர், தன்னைத்தானே சுட்டுக் கொன்று தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அவர் ஆன்லைன் ரம்மியில் 7 லட்ச ரூபாய் வரையில் இழந்ததாகக் கூறப்பட்டது. இவரைப் போலவே, விழுப்புரம், கோவை எனப் பல மாவட்டங்களில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.