வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் என்பதைத் தொலைநோக்குப் பார்வையோடு முன்னதாகவே உறுதியாகக் கூறியவர் ராகுல் காந்தி என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு:
“மூன்று வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி நேற்று அறிவித்தார்.
கடந்த ஆண்டு பொங்கல் விழாவையொட்டி அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காணவந்த ராகுல் காந்தி, மதுரை விமான நிலையத்தில் அளித்த பேட்டியின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. அந்தப் பேட்டியின்போது நானும் உடனிருந்தேன்.
அவர் பேசும்போது, ‘எனது வார்த்தைகளைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள், இந்த 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டிய கட்டாயம் அரசாங்கத்துக்கு ஏற்படும். நான் சொன்னதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்…’ என்று ராகுல் காந்தி அளித்த பேட்டி நாடு முழுவதும் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
இந்தப் பேட்டியின் மூலம், விவசாயிகளின் எழுச்சிக்கு முன்னால் மோடி அரசு பணிய வேண்டிய நிலை ஏற்படும் என்பதைத் தொலைநோக்குப் பார்வையோடு உறுதியாகக் கூறியவர் ராகுல் காந்தி. இதற்காக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் அவரைப் பாராட்டி வருகிறார்கள்.”
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.