நாடாளுமன்றத்தில் நீங்கள் ஆற்றிய கிளர்ச்சியூட்டும் உரைக்கு, அனைத்துத் தமிழர்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ராகுல் காந்திக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று ராகுல் காந்தி பேசும்போது, “உங்கள் வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களை உங்களால் ஆள முடியாது. அது உங்களால் முடியவே முடியாது” என்று பாஜகவை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
மாநில அரசின் உரிமை குறித்து நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்த ராகுலின் பேச்சுக்கு பரவலாக பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியின் பேச்சு குறித்து ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கருத்தை அழுத்தமாக வெளிப்படுத்தி, நாடாளுமன்றத்தில் நீங்கள் ஆற்றிய கிளர்ச்சியூட்டும் உரைக்கு, அனைத்துத் தமிழர்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுயமரியாதையை மதிக்கும் தனித்துவமான கலாச்சாரம் கொண்ட தமிழர்களின் நீண்ட கால வாதங்களுக்காக நீங்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துள்ளீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியின் முழு பேச்சு
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசினார். அப்போது, “உங்கள் வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களை உங்களால் ஆள முடியாது. அது உங்களால் முடியவே முடியாது” என்று பாஜகவை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
அதனைக் குறிப்பிட்டு ட்விட்டரில் பதிலளித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “வழக்கம்போல் உங்கள் பேச்சைக் கேட்டு நாங்கள் சிரித்து மகிழ்ந்தோம் ராகுல் ஜி. நீங்கள் உங்கள் பேச்சில் தமிழகத்தை பாஜக ஆளவே முடியாது என்று மீண்டும் மீண்டும் கூறினீர்கள். நான் தமிழகத்தின் மைந்தன் என்ற வகையில் இந்த விஷயத்தில் உங்களை வழிநடத்த விரும்புகிறேன் ராகுல் ஜி. நீங்கள் இப்போது தமிழகத்தில் திமுகவின் ஆக்சிஜன் உதவியுடன் ஐசியுவில் இருக்கிறீர்கள். நாங்கள் புதுச்சேரியில் ஆட்சியில் இருக்கிறோம். நமது பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை அங்கீகரித்த புதுவை மக்களுக்கு நன்றி. அது ஒரு மைல்கல். அந்த மைல்கல்லின் அடுத்த ஜங்ஷன் தமிழமாகத் தான் இருக்கும். வரலாற்றை எப்போதும் மறக்காதீர்கள் சார். அமேதியில் நடந்தது போன்றதொரு வரலாறு மீண்டும் நிகழ்த்தப்படும். இப்போதைக்கு விடைபெறுகிறேன் சார். அடுத்த நீங்கள் போலியாக ஒரு சர்ச்சையை உருவாக்கும் வரை விடைபெறுகிறேன்” என்று பேசினார்.