புதுச்சேரி அருகே வேட்டையாடப்பட்ட அரியவகை பறவைகள், விலங்குகள் மற்றும் நாட்டுத் துப்பாக்கிகளை வனத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அடுத்த ஒதியம்பட்டு பகுதியில் திருக்காஞ்சி சாலையில் நரிக்குறவர்கள் குடியிருப்புகள் உள்ளது. இங்கு இன்று அதிகாலை வனத்துறை துணை வனக்காப்பாளர் வஞ்சுளவள்ளி தலைமையில் துணை இயக்குநர் குமாரவேல், வன அலுவலர் பிரபாகர் உள்ளிட்ட வனத்துறையினரும், போலீஸ் எஸ்பி வம்சீரதரெட்டி உத்தரவின்பேரில் போலீஸாரும் சோதனை நடத்தினர்.

அங்குள்ள 4 வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, நரிக்குறவர்கள் வேட்டையாடி விற்பனைக்காக வைத்திருந்த நீர் காகம், கழுகு, நத்தக்கொத்தி, நாரை, முஞ்சள் மூக்கன், ஆள்காட்டி குருவி உள்ளிட்ட 67 வகை பறவை இனங்கள், உடும்பு 2, பாலாமை-1, முயல்கள்-2, கிளிகள்-2 உயிரோடும், இறைச்சியாகவும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் வேட்டையாட பயன்படுத்தப்பட்ட 4 நாட்டுத் துப்பாக்கிகள், பாஸ்பரஸ் குண்டுகள், விலங்குகள் பிடிக்க பயன்படுத்தப்படும் கன்னிகள், அரிவாள் கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்கள் ஆகியவற்றைளையும் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் ஒரு வீட்டில் இருந்து 3 கிலோ மான்கறி கைப்பற்றப்பட்டது. இந்த சோதனையின்போது நரிக்குறவர்களுக்கும், வனத்துறையினருக்கும் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக வனத்துறை ஊழியர்கள் ஆறுமுகம், மஸ்தூர் ஆகியோர் தாக்கப்பட்டனர். இதில் ஆறுமுகத்துக்கு கையில் முறிவு ஏற்பட்டது. உடனடியாக அவர் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பறவைகள், ஆயுதங்கள் புதுச்சேரி வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டன.

இதுகுறித்து வனத்துறை துணை வனக்காப்பாளர் வஞ்சுள வள்ளி கூறும்போது, ‘‘ஒதியம்பட்டு நரிக்குறவர் பகுதியில் அரிய வகை பறவைகள் வேட்டையாடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு போலீஸாருடன் சேர்ந்து சோதனை மேற்கொண்டோம். அப்போது 4 வீடுகளில் நடத்திய சோதனையில் அரிய வகை பறவைகள், விலங்குகள், துப்பாக்கிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளோம். குறிப்பாக மான்கறி அங்கு இருந்தது. இருப்பினும் அது மான்கறியா அல்லது வேறு விலங்கின் கறியா என பரிசோதனை செய்ய ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மான் கறியை விற்றவருக்கும் அதை வாங்கியவருக்கும் 7 ஆண்டு வரை தண்டனை உண்டு. மேலும், கியூ.ஆர் கோடுகளைக் கொண்டு செல்போனில் வாடிக்கையாளர்களை உருவாக்கி ஆன்லைன் மூலம் பணம் பரிமாற்றம் செய்து கொண்டு விலங்குகள் விற்பனை செய்யப்பட்டு வந்ததும், பறவைகள், விலங்குகள் அனைத்தும் தமிழகப் பகுதியில் வேட்டையாடப்பட்டு புதுச்சேரியில் விற்க கொண்டுவரப்பட்டவை எனவும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து தமிழக வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன விலங்குகளை வேட்டையாடியவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்’’ என்றார்.