சத்தீஸ்கரில் நக்ஸல் நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் விரிவாக எடுத்துக்கூறியதாக அம்மாநில முதல்வர் பூபேஷ் பெகல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியை புதுடெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பெகல் இன்று (சனிக்கிழமை) சந்தித்துப் பேசினார். பிரதமரின் இல்லத்தில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. சந்திப்பின்போது, சத்தீஸ்கர் மாநில பழங்குடி வகுப்பைச் சேர்ந்த கணவன் – மனைவி சிலையை பிரதமர் நரேந்திர மோடிக்கு பூபேஷ் பெகல் பரிசாக வழங்கினார்.

இந்தச் சந்திப்பு குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பூபேஷ் பெகல், ”சத்தீஸ்கரில் நக்ஸல் நிலை குறித்து நாங்கள் விவாதித்தோம். பெண்கள், விவசாயிகள் உள்ளிட்டோருக்கான மாநில அரசின் திட்டங்கள் எவ்வாறு நிறைவேற்றப்படுகின்றன என்பது குறித்து பிரதமருக்கு நான் எடுத்துரைத்தேன்” என தெரிவித்தார். மேலும், பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் இறந்ததற்கு தனது ஆழ்ந்த இரங்கலை நேரில் தெரிவித்ததாகவும் பூபேஷ் பெகல் கூறினார்.

வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு பதில் அளித்த பூபேஷ் பெகல், ”வரும் 2024-ல் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை கொண்டு வர வேண்டும் என்பதுதான் எனது கருத்து. அவரது தலைமையின் கீழ்தான் காங்கிரஸ் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். அப்போதுதான் கட்சி வெற்றி பெற முடியும்” என்று தெரிவித்தார்.