அம்மா உணவகத்துக்கு வழங்கப்படும் எண்ணெய், பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் அம்மா உணவக ஊழியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

 

யில் முதன்முதலாக 2013-ம் ஆண்டு 207 அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டன. இங்கு இட்லி,பொங்கல்,சாம்பார் சாதம், கலவை சாதம், தயிர் சாதம், சப்பாத்தி உள்ளிட்ட உணவுகள் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. இவ்வாறு குறைவான விலையில் சென்னையில் பலர் அம்மா உணவங்களை நம்பி உள்ளனர். கரோனா ஊரடங்கு காலத்தில் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களுக்கு ஏழை மக்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால், சென்னையில் அம்மா உணவகம் மூலம் கிடைக்கும் வருவாய் குறைந்து கொண்டே வருகிறது. அம்மா உணவகத்தை நடத்த ஆண்டுக்கு 140 கோடி ரூபாய் செலவு ஆகிறது. ஆனால், 20 கோடி ரூபாய் மட்டுமே வருவாய் கிடைக்கிறது. மீதம் 120 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. அம்மா உணவகங்கள் ரூ.786 கோடி நஷ்டத்தில் இயங்கி வருவதால், வருவாய் மிகக் குறைவாக உள்ள அம்மா உணவகங்ளை மூடவேண்டும் என்று கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற சென்னை மாநகராட்சி மாமன்றத்தில் கணக்குக் குழு தலைவர் தனசேகரன் வேண்டுகோள் வைத்தார்.

2023-24-ல் அம்மா உணவகங்களில் சமையல் உபகரணங்கள், கட்டிட சீரமைப்பு உள்ளிட்ட பராமரிப்பு பணிகளுக்காக மட்டும் ரூ.9.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில், அம்மா உணவகத்திற்கு வழங்கப்படும் எண்ணெய், பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாக அம்மா உணவக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அம்மா உணவக பணியாளர்கள் கூறுகையில்,”ஒரு அம்மா உணவகத்தில் இதற்கு முன் 10 முதல் 12 பேர் பணியாற்றி வந்தோம். தற்போது எட்டு பேர் என்ற அளவில் பணியாளர்கள் எண்ணிக்கையை குறைக்கப்பட்டுள்ளது. தினசரி 300 ரூபாய் வீதம், 9,000 ரூபாய் மாத சம்பளமாக வழங்கப்பட்டது. தற்போது ரூ.6,000 மட்டுமே கிடைக்கிறது. அதுவும் ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து விட்டு, உங்களின் ஊதியத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகை இவ்வளவுதான். இதை வைத்து உங்களுக்கான ஊதியத்தை பிரித்து கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள்.

உணவகத்துக்கு வழங்கப்படும் அரிசி, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனால். பல நேரங்களில் எண்ணெய் இல்லாமல் தான் சப்பாத்தி போட்டு விற்பனை செய்து வருகிறோம். ஏழு சிலிண்டர் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது நான்கு தான் வழங்கப்படுகிறது. மேலும், சரசாரி வருவாய் குறைந்தால் அதிகாரிகள் கேள்வி கேட்கின்றனர். போதிய அளவில் வருவாய் கிடைக்காத நேரத்தில், எங்களது சொந்தப் பணத்தை கொடுத்து வருவாயை ஈடுகட்டுகிறோம்.

அம்மா உணவகத்தில் புதிய உணவுகளை அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். சாதம், சாம்பார், பொறியல், ரசம் ஆகியவற்றை கொடுத்தால், பொதுமக்கள் உணவு அருந்துவது அதிகரிக்கும். இதன்மூலம் வருவாயையும் அதிகரிக்கும். உணவகத்திற்கு வரும் பொதுமக்கள் அதிகளவில் இதுபோன்ற கருத்துகளை தெரிவிக்கின்றனர். எனவே இது தொடர்பாக மாநகராட்சி பரிசீலனை செய்ய வேண்டும்” என்று அவர்கள் கூறினர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “அம்மா உணவகத்தை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை. அம்மா உணவகத்தில் நடைபெறும் முறைகேடுகளை குறைக்க தான், தேவையான அளவுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்படுகிறது. தேவைக்கு அதிகமான அளவில் இருக்கும் இடங்களில் பணியாளர்களை குறைக்கப்படுகின்றனர். எந்த அளவுக்கு விற்பனை செய்யப்படுகிறதோ, அதே அளவுக்கு மளிகைப் பொருட்கள் வழங்கப்படுகிறது” என்றனர்