உக்ரைன் மீதான போரைக் கண்டித்து ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா. சபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பை மீண்டும் புறக்கணித்துள்ளது இந்தியா.
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து நிரந்த உறுப்பினரான ரஷ்யா இடைக்கால நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஐ.நா. பொதுச் சபையில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. இந்தத் தீர்மானத்தை 93 நாடுகள் ஆதரித்தன, 24 நாடுகள் எதிர்த்தன, 58 நாடுகள் புறக்கணித்தன. வாக்கெடுப்பைப் புறக்கணித்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளது.

ஏற்கெனவே ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், ஐ.நா. பொதுச் சபைகளில் கொண்டு வரப்பட்டத் தீர்மானங்களை இந்தியா புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மீண்டும் ஒருமுறை வாக்கெடுப்பைப் புறக்கணித்துள்ளது இந்தியா.

உக்ரைனின் புக்கா நகரில் நடத்தப்பட்ட படுகொலைகள் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதை முன்வைத்தே வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் அதையும் கூட இந்தியா புறக்கணித்துள்ளது பல்வேறு உலக நாடுகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
புறக்கணிப்பு ஏன்? இந்நிலையில் வாக்கெடுப்பை ஏன் புறக்கணிக்கிறோம் என்று பேசியுள்ளார் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்த உறுப்பினர் டி.எஸ்.திருமூர்த்தி. அப்போது அவர், “நாங்கள் இந்த வாக்கெடுப்பைப் புறக்கணிக்கிறோம். இதில் அர்த்தமிருக்கிறது. நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வருவது குறித்து நாங்கள் வருத்தம் கொள்கிறோம். அனைத்துத் தரப்பும் வெறுப்பை விட்டொழிக்க வேண்டும் என்று மீண்டும் கேட்டுக் கொள்கிறோம். ரத்தம் சிந்தி, அப்பாவி பொதுமக்களின் இன்னுயிரைப் பலி கொடுத்து எதற்கும் தீர்வு காண முடியாது என நாங்கள் நம்புகிறோம். இந்தியா இந்தப் பிரச்சினையில் யார் பக்கம் நிற்கிறது என்று கேட்டால், அமைதியின் பக்கம் என்று சொல்வோம். வன்முறையை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றே இந்தியா விரும்புகிறது. அப்பாவி மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலையில் ராஜாங்க ரீதியாக மட்டுமே தீர்வு காண வேண்டும்” என்று கூறினார்.

கடந்த ஜனவரி மாதம் தொடங்கி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், பொதுச் சபை, மனித உரிமைகள் ஆணையம் என ரஷ்யாவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட 8 தீர்மானங்களில் வாக்களிப்பை இந்தியா புறக்கணித்துள்ளது. இருப்பினும், புக்கா நகரப் படுகொலைகளை ஐ.நா. சபையில் இந்தியா கண்டித்தது. இது தொடர்பாக சுதந்திரமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவித்தது. உக்ரைன், ரஷ்யா விவகாரத்தில் இதுவரை இந்தியா நடுநிலையையே பேணி வருகிறது. இந்தியாவின் தேவைகள் ரஷ்யா, உக்ரைன் என இருநாடுகளையும் சார்ந்துள்ளது. ஆனால், இந்தியா அமைதியின் பக்கம் நிற்கிறது. பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.