உ.பி.யின் பிரயாக் நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1,000 கோடி நிதி வழங்கினார்.

உத்தரபிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி உத்தரபிரதேச மாநிலத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார்.

அதன்படி பிரயாக்ராஜ் நகரில் இன்று மிக பிரம்மாண்டமான மகளிர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பெண்களுக்கான புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் 2 லட்சம் பெண்கள் பங்கேற்றுள்ளனர்.

மேலும் இந்த மாநாட்டின்போது பெண் குழந்தைகள் நலனுக்காக முதல்வர் கன்யா சுமங்களா திட்டத்தின் கீழ் ரூ.20 கோடியை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.

மேலும் 202 சத்துணவு தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு அடிக்கல்லையும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டினார். இந்தத் தொழிற்சாலைகள் தலா ரூ.1 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளன.

மேலும் 16 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.1,000 கோடி நிதியுதவியை பிரதமர் வழங்கினார். தவிர 20 லட்சம் பெண்களுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டம், பெண் குழந்தை களுக்கு நிதியுதவி செய்யும் திட்டம் ஆகியவற்றை பிரதமர் தொடங்கி வைத்தார்.