ரீடிங் மோட், டிஜிட்டல் கார் சாவி உட்பட மற்றும் பல அம்சங்களை பயனர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது கூகுள் நிறுவனம். அந்த அம்சங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.

தொழில்நுட்ப உலகின் சாம்ராட்டான கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக சில புதிய அம்சங்களையும், செயலிகளையும் அறிமுகம் செய்துள்ளது. அணுகல் மற்றும் பயனர் அனுபவ மேம்பாட்டினை கருத்தில் கொண்டு இந்த பணியை கூகுள் அவ்வப்போது மேற்கொள்வதும் வழக்கமான ஒன்றுதான். உலக அளவில் பெருவாரியான மக்கள் பயன்படுத்தி வரும் ஸ்மார்ட்போன்களின் இயங்குதளமாக ஆண்ட்ராய்டு உள்ளது. டிஜிட்டல் உலகின் இயக்க சக்தியும் அதுதான். அதனால் இந்த அப்டேட்களை கூகுள் மேற்கொண்டு வருகிறது.

இந்தச் சூழலில் எதிர்வரும் விழாக்கால கொண்டாட்டத்தை முன்னிட்டு புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளதாக கூகுள் தரப்பில் வலைப்பதிவு (Blog) பதிவு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கூகுள் ஆண்ட்ராய்டு பிரிவு புராடெக்ட் மேனேஜ்மென்ட் இயக்குநர் அங்கனா கோஷ் பகிர்ந்துள்ளார். இந்த புதிய அம்சங்கள் ஆண்ட்ராய்டு மற்றும் வாட்ச் ஓஎஸ் ஸ்மார்ட்வாட்ச்களுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரீடிங் மோட்: ஆப்பிள் ரீடிங் மோடான சஃபாரி போலவே இது இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வாசிப்பு முறை அனுபவத்தின் அக்செஸை இந்த மோட் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் பயனர்களின் விருப்பத்தின்படி எழுத்தின் அளவு, பேக்கிரவுண்ட் வண்ணம், வாசிப்பின் வேகம் போன்றவை இருக்குமாம்

இந்த செயலி பார்வை குறைபாடு கொண்டவர்களுக்கு பெரிதும் உதவும் என கூகுள் தெரிவித்துள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இந்த செயலியை டவுன்லோட் செய்து கொள்ளலாம். ரீடிங் மோட் வீடியோ விளக்கம்..

டிஜிட்டல் கார் கீ ஷேரிங்: ஸ்மார்ட்போன் துணை கொண்டு டிஜிட்டல் முறையில் கார்களின் லாக்கை கட்டுப்படுத்த உதவுகிறது டிஜிட்டல் கார் கீ அம்சம். இந்நிலையில், கூகுளின் டிஜிட்டல் கார் கீ மூலம் பிறருக்கும் பயனர்கள் அதனை பகிரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டிஜிட்டல் வாலட் செயலி மூலம் பயனர்கள் அதனை கட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிகிறது. கூகுள் பிக்சல் 6 போன், ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் மற்றும் அதற்கு அடுத்த சாப்ட்வேர் சப்போர்ட் கொண்ட போன்களில் மட்டும் இது இயங்கும் என தெரிகிறது.

இது தவிர கூகுள் போட்டோவில் ஸ்டைல்ஸ் அம்சம், புதிய எமோஜி, யூடியூப் ஹோம் ஸ்கிரீன் சேர்ச் விட்ஜெட், கூகுள் டிவி டூ தொலைக்காட்சியில் நேரடியாக ஸ்கிரீன் காஸ்ட் செய்யும் வசதி மற்றும் வாட்ச் ஓஎஸ் சாதனத்திலும் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அந்த பிளாக் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.