முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த நாள் அரசு கொண்டாடும் விழாவாகவே தொடர்வது பாராட்டத்தக்கது மட்டுமின்றி வரவேற்கத்தக்கதும் கூட என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுகவின் நிறுவனரும், வள்ளலாகவே வாழ்ந்து வரலாறு படைத்தவருமான முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 105-ம் ஆண்டு பிறந்த நாளை தமிழ்நாடு அரசு விழாவாகவே திமுக ஆட்சி இன்று (17.1.2022) நடத்துவது பொதுவாழ்வின் சிறந்த விழுமியங்களில் ஒன்றாகும்.

நல்ல அத்தியாயத்தின் தொடக்கம் அது!

முன்பு கருணாநிதி ஆட்சிக் காலத்தில் இதற்கு முன்னோட்டமாக, மருத்துவப் பல்கலைக் கழகத்திற்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்பெற்றது (1998-ம் ஆண்டு). நல்ல அத்தியாயத்தின் தொடக்கம் அது! அரசியலில் கருத்து வேறுபாடுகளும், அவ்வப்போது சில கசப்புணர்வுகளும் தலைவர்கள்-கட்சிகளிடையே வருவது உண்டு. அதைக் கடைசிவரை கொண்டுசெலுத்துவது ஏற்கத்தக்கதல்ல.

பொதுவாழ்வில் நல்ல திருப்பம்!

இடையில்தான் இதுபோன்ற நிலைகள் முளைத்தன-கிளைத்தன-எதிர்க்கட்சிகள்- எதிரிக் கட்சியாகவே திகழும் விரும்பத்தகாத நிலை. அது மெல்ல விடைபெறுவது பொதுவாழ்வில் நல்ல திருப்பமே ஆகும்! சமூக நீதி வரலாற்றில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ரூ.9,000 வருமான வரம்பை அவர் கொண்டு வந்தபோது ஏற்பட்ட பெருங்கிளர்ச்சி, அரசியல் தோல்வி- அதன் பிறகு அனைத்துக் கட்சிக் கூட்டம் போன்றனவற்றின் மூலம் அவர் மிகவும் தெளிவுற்று, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இருந்த 31 சதவிகிதத்தை 50 சதவிகிதம் என்று உயர்த்தி, ஒட்டுமொத்தத்தில் (ஏற்கெனவே எஸ்.சி., 18), 68 என்றாகி, பிறகு 69 சதவிகிதம் (எஸ்.டி. 1) வர, முழுக் காரணமானார் அவரென்பது என்றும் மறைக்கப்பட முடியாத ஒன்று. சமூக நீதி வரலாற்றில் முக்கிய மைல்கல்லும்கூட!

பாராட்டத்தக்கது; பின்பற்றத்தக்கது!

எனவே, அரசு கொண்டாடும் விழாவாகவே அது தொடர்வது பாராட்டத்தக்கது; பின்பற்றத்தக்கது. இந்த அரசியல் நாகரிகம் தொடரட்டும்!” என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்.