பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு போலீஸாரால் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டவருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோட்டை சேர்ந்தவர் முருகன். இவர் கடந்த 2009-ம் ஆண்டு ஈரோட்டிலிருந்து திருப்பூர் சென்றுள்ளார். பெருமாநல்லூர் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த அவரை, பெருமாநல்லூர் காவல் நிலையத்தின் அப்போதைய ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி காவல் நிலையம் அழைத்து சென்று துன்புறுத்தியதாக, தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் முருகன் புகார் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், “திருடப்பட்ட நகைகள் எங்கே என கேட்டு, காவல் நிலையத்தில் வைத்து என்னை போலீஸார் தாக்கினர். தொடர்ந்து, ஈரோட்டில் உள்ள எனது வீட்டுக்கு அழைத்து சென்று விசாரணை என்ற பெயரில் எனது மனைவி மற்றும் சகோதரியை தகாத வார்த்தைகளில் பேசி வீட்டையும் சூறையாடினர். சம்பந்தப்பட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று முருகன் கூறியிருந்தார்.
இந்த புகாரை மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ் விசாரணை செய்து வந்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
தவறான குற்றச்சாட்டில் முருகனை கைது செய்து துன்புறுத்தியது ஆதாரங்கள் மூலம் நிரூபணமாகியுள்ளது. அவருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடாக 8 வாரங்களில் தமிழக அரசு வழங்க வேண்டும். இந்த தொகையை பெருமாநல்லூர் அப்போதைய காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளரிடம் இருந்து தலா ரூ.3 லட்சம் வீதம் வசூலிக்க அரசுக்கு பரிந்துரைக்கிறேன். இவ்வாறு அந்த உத்தரவில் அவர் கூறியுள்ளார்.