மாநிலக் கல்லூரியில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உயதநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

முதலில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ”நான் இந்த பட்டமளிப்பு விழாவிற்கு வருவதற்காக நேற்று இரவு எல்லாம் தரவுகளை தயார் செய்து வைத்திருந்தேன்.ஆனால் அதை எல்லாம் கல்லூரியின் முதல்வர் பேசி விட்டார். நான் பட்டம் பெறும்போது கூட இந்த கவுன் அணிந்ததில்லை, முதன் முறையாக இந்த கவுன் அணிய வாய்ப்பு அளித்த முதலமைச்சர், உயர்கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்டவருக்கு நன்றி என்று கூறினார்.

இவ்விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,  “2,000 பேர் அமரும் வகையில் மாபெரும் அரங்கம் கலைஞர் பெயரில் மாநில கல்லூரியில்  அமைக்கப்படும். சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் நிதியை உதயநிதியும், தயாநிதியும் அளிக்க வேண்டும். மாற்று திறனாளி மாணவர்களுக்கு கல்லூரி வளாகத்தில் விடுதி அமைத்து தரப்படும் என்று அறிவித்தார்.

தொடர்ந்து பேசிய முதல்வர், நான் படித்த மாநில கல்லூரி நிகழ்சியில் பங்கேற்பதில் இருமாப்படைகிறேன். உங்களது சீனியர் எனும் அடிப்படையில் மாணவர்களை வாழ்த்துகிறேன். மாநில கல்லூரியில் அரசியல் அறிவியல் பாடபிரிவு பயின்ற நிலையில் படிப்பில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள முடியவில்லை.

மிசா காலத்தில் ஓராண்டு சிறையிலிருந்த போது போலீஸ் பாதுகாப்போடு இந்த கல்லூரியில் தேர்வு எழுதினேன். அறிவு, சொத்துக்களை உருவாக்கி தரும் மகத்தான கல்லூரியாக மாநிலக் கல்லூரி திகழ்கிறது. கல்வியை கடல் என கூறுவார்கள் அந்த கடலுக்கு எதிரில் இருக்க கூடிய கல்லூரி மாநில கல்லூரி.

1840 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கல்லூரி. சென்னை பல்கலை கழகம் தொடங்குவதற்கு முன்னமே உருவானது. திராவிட இயக்கத்தின் மூத்த முன்னோடிகள் சர் பிடி தியாகராயர், டி.எம்.நாயர் ஆகியோர் இந்த கல்லூரி படித்தவர்கள். சென்னை பல்கலையில் ஒவ்வொரு ஆண்டும் மாநில கல்லூரி மாணவர்களே அதிக முனைவர் பட்டங்களை பெற்றுள்ளனர்.

மனித நேய கல்லூரியாக திகழ்கிறது

மாற்று திறனாளி மாணவர்களுக்கு அதிக வாய்ப்பளிப்பதால் மனித நேய கல்லூரியாக இந்த கல்லூரி திகழ்கிறது. சமூக நீதி தத்துவமே பிள்ளைகளின் கல்வி இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காக உருவாக்கப்பட்டது தான். படியுங்கள் பட்டம் பெறுங்கள் ஒரு பட்டத்தோடு நிறுத்தி விடாதீர்கள், பெண்கள் மிகுதியாக கல்வி பெற வேண்டும். பட்டம் பெற்ற பெண்கள் தங்கள் கல்வித் தகுதிக்கு ஏற்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். 56 விழுக்காடு பெண்கள் உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பில் உள்ளனர்.

50 ஆண்டுகளுக்கு முன்பு கல்வி பெற்றவர்கள் விழுக்காடு என்ன? இது தான் திராவிட இயக்கத்தின் சாதனை. கடந்த ஓராண்டில் பள்ளி கல்வித்துறை துள்ளி எழுந்துள்ளது என்று கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், யாராலும் திருட முடியாத ஒரே சொத்து கல்விதான் என்று கூறினார்.

 

இந்த விழாவில் கலைப்பிரிவில் 1,613 மாணவர்கள் மற்றும் அறிவியல் பிரிவில் 1,597 மாணவர்கள் பட்டம் பெற்றனர். 2019, 2020, 2021 ஆம் ஆண்டுகளில் தேர்ச்சிபெற்ற 2,198 இளநிலை மாணவர்களுக்கும், 806 முதுநிலை மாணவர்களுக்கும், 206 ஆராய்ச்சி மாணவர்கள் (எம்.பில்) உட்பட 3,210 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. கலை மற்றும் அறிவியல், M.Phil உள்ளிடட்ட பாடப் பிரிவுகளில் முதலிடம் பெற்ற 78 பேர் முதலமைச்சரிடம் பட்டம் பெற்றனர்.