விருதுநகர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை விறுவிறுப்புடன் தொடங்கியது.
விருதுநகர் மாவட்டத்தில் 2019-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் போது நிரப்பப்படாத பதவியிடங்கள் மற்றும் ஜூன் 2021 மாதம் வரை காலியாகவுள்ள 54 பதவியிடங்களுக்கு தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தால் சாதாரண-தற்செயல் தேர்தல்கள் – 2021 அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பெறப்பட்ட வேட்புமனுக்களின் அடிப்படையில், 29 கிராம ஊராட்சி வார்டு பதவியிடங்களுக்கான உறுப்பினர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர்.
மீதமுள்ள 1 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 3 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 4 கிராம ஊராட்சித் தலைவர் மற்றும் 17 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் என, மொத்தம் 25 பதவியிடங்களுக்கு கடந்த 9ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
இதில், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடத்துக்கு 6 வேட்பாளர்கள், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடத்துக்கு 17 வேட்பாளர்கள், கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடத்துக்கு 15 வேட்பாளர்கள், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடத்துக்கு 53 வேட்பாளர்கள் என, மொத்தம் 91 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தளவாய்புரம் மாரிமுத்து நாடார் மேல்நிலைப்பள்ளி, சாத்தூர் எட்வர்டு மேல்நிலைப்பள்ளி, சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், விருதுநகர் செந்திகுமார நாடார் கல்லூரி ஆகிய 9 மையங்களில் இன்று (அக். 12) காலை வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.