சூர்யா சிவா கைதைக் கண்டித்து திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தை நேற்று முற்றுகையிட முயன்ற பாஜக-வினர் 285 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திமுக மாநிலங்களவை குழுத் தலைவரான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா. பாஜக ஓபிசி அணி மாநில பொதுச் செயலாளராக உள்ளார். இவரது கார் மீது ஜூன் 11-ம் தேதி தனியார் பேருந்து மோதியது. இதில், சேதமடைந்த தனது காரை சீரமைப்பதற்கான செலவுத்தொகையை தனியார் பேருந்து நிறுவனம் வழங்கவில்லை என்றுகூறி, அந்நிறுவனத்துக்கு சொந்தமான மற்றொரு பேருந்தை ஜூன் 19-ம் தேதி கடத்திச் சென்றதாக சூர்யா சிவா மீது கன்டோன்மென்ட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

அப்போது, அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோரின் தூண்டுதலின்பேரில்தான் தன் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக சூர்யா சிவா குற்றம்சாட்டியிருந்தார். இதையடுத்து, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாவட்டப் பொறுப்பாளராக உள்ள தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக பாஜக அறிவித்திருந்தது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திமுக அலுவலகம் அமைந்துள்ள திருச்சி வி.என்.நகர் பகுதியில் மாநகர காவல் துணை ஆணையர்கள் அன்பு, ஸ்ரீதேவி ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீஸார் நேற்று குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், பாஜக திருச்சி மாவட்டத் தலைவர் எஸ்.ராஜசேகரன் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் எம்.கருப்பு முருகானந்தம், ஓபிசி அணி மாநிலத் தலைவர் சாய் சுரேஷ் உள்ளிட்ட பாஜகவினர் நேற்று சத்திரம் பேருந்து நிலைய பகுதியிலிருந்து, வி.என்.நகர் நோக்கி பேரணியாகப் புறப்பட்டனர். அவர்களை கரூர் புறவழிச் சாலை பகுதியில் போலீஸார் தடுத்து நிறுத்தியபோது, லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, ராஜசேகரன், கருப்பு முருகானந்தம் உட்பட 285 பேரை போலீஸார் கைது செய்து, தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

அப்போது, கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் கூறியது:

இந்த மிரட்டலுக்கு பாஜக பயப்படாது. மிக விரைவில் தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரப்போகிறது. அப்போது, ஒருதலைபட்சமாக நடந்துகொண்ட காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்போம். அமைச்சராக இருப்பதால் பாஜகவினர் மீது பொய் வழக்கு போடலாம் என யாரும் நினைக்கக்கூடாது. ஒவ்வொரு அமைச்சரும் செய்யக்கூடிய ஊழல் பட்டியல்கள் எங்களிடம் உள்ளன. பாஜகவினரை மிரட்டினால், மாநிலத் தலைவர் அண்ணாமலையை வரவழைத்து பல ஆயிரக்கணக்கானோரைத் திரட்டி போராட்டம் நடத்துவோம் என்றார்.