தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., மற்றும் பி.ஆர்க்., மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வு மற்றும் தேர்வுக்கான வழிகாட்டுதல்களை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ளது. வரும்பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் மார்ச் முதல் வாரம் வரை காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் இந்த தேர்வுகள் நடைபெறவுள்ளது.
கரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பொறியியல், பாலிடெக்னிக் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் வழியாக நடத்தப்படும் என்று தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடந்த வாரம் அறிவித்தார். இந்த நிலையில், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான பி.இ., பி.டெக்., மற்றும் பி.ஆர்க் உள்ளிட்ட படிப்புகளுக்கான தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் மார்ச் முதல் வாரம் வரை காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் இந்த தேர்வுகள் நடைபெறவுள்ளது. மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதள பக்கத்தில் தேர்வு அட்டவணையை தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறும் செமஸ்டர் தேர்வுகள் கரோனா பரவல் காரணமாக ஜனவரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பிப்ரவரி முதல் வாரத்தில் ஆன்லைனில் தேர்வுகள் நடைபெறவுள்ளது.
வழிகாட்டுதல்கள்: மேலும் ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகளை எழுதும் மாணவர்களுக்கான வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், செமஸ்டர் தேர்வுகளை மாணவர்கள் தாங்கள் இருந்த இடத்தில் இருந்தே எழுதலாம். அரியர் தேர்வு எழுதும் மாணவர்கள் இறுதியாக படித்த கல்லூரிகளை தொடர்பு கொண்டு தேர்வுக்கான அனுமதிச்சீட்டை பெற்றுக் கொள்ளலாம். தேர்வு எழுதுகின்ற மாணவர்களுக்கு கூகுள் கிளாஸ்ரூம் அல்லது மின்னஞ்சல் வழியாக வினாத்தாள்கள் அனுப்பி வைக்கப்படும். தேர்வு எழுதிய வினாத்தாள்களை மின்னஞ்சல் அல்லது கூரியர் மூலமாக மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விடைத்தாள்களில் பதிவு எண், பெயர், பாட குறியீடு, பாடத்தின் பெயர் உள்ளிட்டவற்றை வினாத்தாளின் ஒவ்வொரு பக்கத்திலும் குறிப்பிட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.