சென்னையில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும், பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் காவல் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றனர். கடந்த 21-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவர், கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட 4 பேர் மற்றும் வழிப்பறி வழக்கில் சம்பந்தப்பட்ட 2 பேர் என மொத்தம் 7 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
நடப்பாண்டில் இதுவரை 131 குற்றவாளிகள் குண்டர் தடுப்புகாவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், கொலை, கொலை முயற்சி, திருட்டு குற்றங்களில் ஈடுபடுபவர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தல், உயிர்காக்கும் மருந்துகள், போதை மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை பதுக்கிவைத்து விற்பவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.