இந்தியாவிலேயே முதல் முறையாக சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் சென்னைக்கு அருகில் ஏற்படுத்தப்படும் என, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று (செப். 02) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில், அத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 110 அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது, இந்தியாவிலேயே முதல் முறையாக சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் சென்னைக்கு அருகில் ஏற்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
இது தொடர்பான அறிவிப்பில், “தமிழகத்தின் பழமையான மருத்துவ முறைகளான சித்த மருத்துவத்தைப் போற்றும் வகையில் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட சித்த மருத்துவத்துக்கென தனிப் பல்கலைக்கழகம் (இந்திய மருத்துவ முறைகளான ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி மற்றும் யோகா மற்றும் இயற்கை மருத்துவம் உட்பட) சென்னைக்கு அருகில் ஏற்படுத்தப்படும்” எனத் தெரிவித்தார்.