பொன்னேரி: வடசென்னை மற்றும் வல்லூர் அனல் மின் நிலையங்களில் கொதிகலன் குழாய்களில் ஏற்பட்ட கசிவு காரணமாக  1100 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு மற்றும் வல்லூர் ஆகிய பகுதிகளில் அனல் மின் நிலையங்கள் உள்ளன.  இதில், அத்திப்பட்டு வடசென்னை அனல்மின்நிலையத்தில் 5 அலகுகள் உள்ளன.

இங்கு  தினமும் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்குள்ள 2வது நிலையில் உள்ள 1வது அலகில் கொதிகலன் குழாயில் கசிவு ஏற்பட்டு பழுதானது. இதனால் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோல் வல்லூர் அனல் மின் நிலையத்தில் 3 அலகுகளில் 1500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.  தற்போது 3வது அலகில் உள்ள கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் இரு அனல் மின் நிலையங்களில் கொதிகலன்களில் பழுது ஏற்பட்டதால் 1100 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கொதிகலன் கசிவை சரிசெய்யும் பணியில்  ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.