சென்னை: ஓடிடி தளங்களில் சிறிய பட்ஜெட் படங்களை விற்பது கடினமாக உள்ளது என்று இயக்குனர் பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குனர் ஷான் இயக்கத்தில் யோகி பாபு நடித்துள்ள படம், ‘பொம்மை நாயகி’. சுபத்ரா, ஹரி, ஜி.என்.குமார், அருள்தாஸ், ஜெயச்சந்திரன், லிசி ஆண்டனி உள்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். யோகிபாபு மகளாக ஸ்ரீமதி நடித்திருக்கிறார். பொம்மை நாயகி படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. இதில் மாரி செல்வராஜ், யோகி பாபு, ரஞ்சித் ஆகியோர் கலந்து கொண்டனர்
நிகழ்வில் இயக்குனர் ரஞ்சித் பேசும்போது , “ஓடிடி-க்கள் வந்த பிறகு சிறிய படங்களுக்கு வரவேற்பு இருந்தது. ஆனால் தற்போது சிறிய படங்களை ஓடிடி தளங்களில் விற்பது கடினமாக உள்ளது. நெட்பிளக்ஸ், அமேசான் என எதுவாக இருந்தாலும் வருடத்திற்கு 12 படங்கள் வாங்குகிறார்கள் என்றால், அந்த 12 படங்களும் பெரிய நடிகர்களின் படங்களாகத்தான் உள்ளன. திரையரங்குகளிலும் சிறு படங்களுக்கு திரைகள் கிடைப்பதில்லை. தற்போது ஓடிடியிலும் அதே நிலை நீடிக்கிறது. படத்தை ஓடிடியில் விற்பது சாதாரண விஷயம் அல்ல.
சமீபத்தில் வெளியான லவ் டூடேவை தவிர்த்து மக்களிடம் சிறிய படங்களுக்கு ஆதரவு இருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்றுதான் கூற வேண்டும். இந்த டிஜிட்டல் யுகத்தில் சிறிய படங்களை ஓடிடியில் பார்த்துவிடலாம் என நிறைய மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் சிறிய படங்கள் ஓடிடி தளத்திற்கே செல்ல முடியாத நிலைதான் உள்ளது. இவ்வளவு சிக்கலான சூழலில்தான் பொம்மை நாயகி போன்ற படத்தை பெரும் நம்பிக்கையில் நீலம் தயாரிப்பு நிறுவனம் வாங்கியது. மக்களிடம் இப்படத்தை கொண்டு சென்று விட வேண்டும் என்று முழு மூச்சாக இறங்கி இருக்கிறோம்.பொம்மை நாயகி படத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. இந்தப் படத்தை தயாரித்ததற்கு நீலம் தயாரிப்பு நிறுவனம் பெருமை கொள்கிறது. படத்தில் உள்ள கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்கள். யோகி பாபுவின் நடிப்பில் இப்படம் வேறொரு பரிமாணத்தை காட்டும் என்று நினைக்கிறேன்” என தெரிவித்தார்.