தரைவழிப் போக்குவரத்தில் பயணிக்கும் வாகனங்களைக் காட்டிலும், வான்வழி போக்குவரத்தில் பயணிக்கும் விமானங்களின் பாதுகாப்பு அதி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. நடுவானில் பறந்து கொண்டிருக்கும் விமானத்தில் ஏதேனும் பிரச்சனை என்றால் உடனடியாக அருகாமையில் இருக்கும் விமான நிலையத்தில் அதை தரையிறக்கம் செய்வது ஒன்று மட்டுமே ஆபத்தை தவிர்ப்பதற்கான வழிமுறை ஆகும்.

விமானங்களில் எரிபொருள் பற்றாக்குறை, இயந்திரங்களில் கோளாறு என ஏதேனும் காரணத்தால் எந்தவொரு நிறுவனத்தின் விமானமும் எப்போதாவது ஒருமுறை இப்படி தரையிறக்கம் செய்யப்படுவது வாடிக்கை தான்.

ஆனால், வெறும் 18 நாட்களில் 8 பிரச்சனைகளை சந்தித்து, பயணிகளின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எதிர்கொண்டுள்ளது ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம். அண்மையில், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் சரக்கு விமானம் ஒன்று சீனாவின் ஜோங்கிங் நகருக்கு சென்று கொண்டிருந்த நிலையில், விமானத்தின் வானிலை ரேடார் வேலை செய்யவில்லை என்பது தெரியவந்த காரணத்தினால் அந்த விமானத்தை கொல்கத்தா விமான நிலையத்தில் விமானிகள் தரையிறக்கம் செய்தனர்.

இதுகுறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “2022ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி, ஸ்பைஸ்ஜெட் போயிங் 737 சரக்கு விமானமானது கொல்கத்தாவில் இருந்து சீனாவின் ஜோங்ஜிங் நகருக்கு புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் வானிலை ரேடாரில் வானிலை காட்டப்படவில்லை என்பதை பைலட்டுகள் கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்து கொல்கத்தா திரும்புவதற்கு முடிவு செய்யப்பட்டது. கொல்கத்தாவில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது’’ என்று கூறினார்.

டிஜிசிஏ நோட்டீஸ் : 

இதற்கிடையே, விமானங்களில் நிலவும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து இந்திய விமானப் போக்குவரத்து ஆணையரகம் (டிஜிசிஏ) சார்பில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை மட்டும் பிரச்சினைகளை சந்தித்த ஸ்பைஸ்ஜெட் விமானங்களில் இந்த கொல்கத்தா விமானம் மூன்றாவது ஆகும்.

முன்னதாக, அன்றைய தினத்தில் டெல்லியில் இருந்து துபாய் புறப்பட்டு சென்ற விமானத்தில், நடுவானில் எரிபொருள் இன்டிகேட்டரில் கோளாறு ஏற்பட்டதால், அந்த விமானம் பாகிஸ்தானின் கராச்சி நகரில் தரையிறக்கம் செய்யப்பட்டது.

இதேபோன்று, விண்ட்ஷீல்ட் மீது வெடிப்பு ஏற்பட்டதால், 23 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த மற்றொரு விமானம் மும்பையில் தரையிறக்கம் செய்யப்பட்டது.

உரிய காலத்தில் பதில் அளிப்பதாக ஸ்பைஸ்ஜெட் தகவல் : 

டிஜிசிஏ அமைப்பு அனுப்பியுள்ள நோட்டீஸுக்கு உரிய காலத்தில் பதில் அளிக்கப்படும் என்று ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அந்த நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

தொடர் கதையாகும் பிரச்சினைகள் : 

முன்னதாக, கடந்த ஜூன் மாதம் 19ஆம் தேதி பீகார் மாநிலம், பாட்னாவில் 185 பயணிகளுடன் புறப்பட்ட சில நிமிடத்தில், ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தீ பிடித்தது. இதையடுத்து உடனடியாக அங்கேயே தரையிறக்கம் செய்யப்பட்டது. பறவை மோதியதில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால், இதற்கடுத்து ஒன்றன் பின் ஒன்றாக ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றன.

சரியும் பங்குகள் : 

விமானங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையில், பங்குச்சந்தையில் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவன பங்குகளின் விலை சரிவடைய தொடங்கியுள்ளன. முன்னதாக, 2018 – 19 நிதியாண்டில் ரூ.316 கோடி, 2019 -20 நிதியாண்டில் ரூ.934 கோடி, 2020 – 21 நிதியாண்டில் ரூ.998 கோடி என்ற வகையில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் நிகர இழப்புகளை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.