சென்னை: ஆன்லைன் ரம்மி தடை தொடர்பாக சட்டம் இயற்ற, மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதாக தமிழக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் குறித்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் வாதாடிய மத்திய அரசு வழக்கறிஞர்கள், தடை சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
முந்தைய அதிமுக அரசு இதுகுறித்த சட்டத்தை இயற்றியபோது தொடரப்பட்ட வழக்கில், அது ஒரு திருத்தச் சட்டம் என்று கூறி, உயர் நீதிமன்றம் அதை ரத்து செய்தது. அதேநேரத்தில், சட்டம் இயற்றுவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் தெரிவித்தது.
ஆனால், சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று அப்போது மத்திய அரசு முறையிடவில்லை. இந்நிலையில், தற்போது தமிழக அரசுக்கு இந்த சட்டத்தை இயற்ற அதிகாரமில்லை என்று மத்திய அரசு வழக்கறிஞர் வாதிட்டு, இதே விஷயத்தில் மத்திய அரசும் சட்டம் இயற்றி உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஆனால், தகவல் தொடர்பு தொழில்நுட்பச் சட்டத்தில் மத்திய அரசு சில விதிகளை மட்டுமே கொண்டு வந்துள்ளது. சட்டம் இயற்றவில்லை. அந்த விதியும், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு உரிமையாளர்களைப் பாதுகாப்பதாகவும், மத்திய அரசுக்கு வருவாயை உருவாக்கும் வகையிலும் அமைந்துள்ளது. மக்களைப் பாதுகாக்கும் விதிகளாக இல்லை.
சூதாட்டம் கொடிய நோய் என்று உலக சுகாதார அமைப்பே கூறியுள்ளது. சூதாட்டத்தால் 40-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதைக் கருத்தில் கொள்ளாமல், ஆன்லைன் விளையாட்டு மூலம் வருவாய் கிடைக்கும் விதிகளை திருத்திவிட்டு, சட்டம் கொண்டுவந்ததாக மத்திய அரசு தெரிவித்து வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
அரசியலமைப்பு சட்டத்தின் மாநிலப் பட்டியலில் சூதாட்ட விளையாட்டு இடம் பெற்றுள்ளது. எனவேதான், மாநில அரசு தனது உரிமையுடன், இதில் சட்டம் இயற்றியுள்ளது.
ரம்மி விளையாட்டை, திறன் விளையாட்டு என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால், அது மக்கள் நேரடியாக அமர்ந்து விளையாடும் ரம்மி விளையாட்டு. தமிழக அரசு இயற்றிய சட்டம், ஆன்லைன் ரம்மி விளையாட்டு குறித்ததாகும்.
ஆன்லைனில் 2 பேர் ரம்மி விளையாடினால், 3-வதாக ப்ரோகிராமர் என்ற மற்றொருவர் புகுந்து, அந்த விளையாட்டை எப்படி வேண்டுமானாலும் மாற்ற முடியும். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் என்னதான் திறமை இருந்தாலும், இறுதியில் ப்ரோகிராமர் புகுத்திய முடிவுதான் வெற்றி பெறும். அதனால்தான் பலரும் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தோல்வியுற்று, பணத்தை இழக்கின்றனர். எனவே, இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது.
இதை உணர்ந்து, மத்திய அரசு உரிய திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும். ஆன்லைன் விளையாட்டு நடத்துபவர்கள் உள்ளிட்ட அனைவரின் கருத்துகளைக் கேட்டே சட்டம் இயற்றப்பட்டது. இதில் எத்தனை நாள் என்பது முக்கியம் இல்லை, அனைத்துத் தரப்பினரின் கருத்துகளும் கேட்கப்பட்டதா என்பதே முக்கியம்.மாறுபட்ட கருத்துகளின் மொத்தவடிவமாக மத்திய அரசு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.