கேப்டன் அமெரிக்கா பட வரிசையில் இரண்டு படங்கள், அவெஞ்சர்ஸ் பட வரிசையில் இரண்டு படங்களை இயக்கி, ஹாலிவுட்டில் முன்னணி இயக்குநர்களாகத் திகழ்ந்து வரும் இயக்குநர்கள் இணை ஆண்டனி மற்றும் ஜோ ருஸ்ஸோ. ருஸ்ஸோ பிரதர்ஸ் என்று அழைக்கப்படும் இவர்களது இயக்கத்தில் இரண்டுமுறை நடிப்புக்காக தேசிய விருதுபெற்ற தனுஷ் நடித்து வரும் படம் ‘தி கிரே மேன்’. உலக அளவிலான ஓடிடி தளங்களில் முதலிடத்தில் இருந்து வரும் நெட்ஃபிலிக்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம், இம்மாதம் 22ஆம் தேதி நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.

இந்தப் படத்தில், தனுஷுடன் ரையான் கோஸ்லிங், கிறிஸ் எவன்ஸ், அனா டி அர்மாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். பட வெளியீட்டை முன்னிட்டு மும்மையில் நடைபெறும் ‘தி கிரே மேன்’ பிரீமியர் காட்சியில் கலந்துகொண்டு தனுஷுடன் இணைந்து ரசிகர்களை சந்திக்க ருஸ்ஸோ சகோதரர்கள் இந்தியா வருகிறார்கள் என்ற தகவலை நெட்ஃபிலிக்ஸ் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும் ருஸ்ஸோ பிரதர்ஸ்

தங்களுடைய இந்திய ரசிகர்களுக்கான ஒரு வீடியோ செய்தியை தங்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அதில், “அனைவருக்கும் வணக்கம்! நான் ஜோ ருஸ்ஸோ மற்றும் நான் ஆன்டனி ருஸ்ஸோ, எங்களின் புதிய படமான ‘தி கிரே மேன்’ படத்துக்காக எங்கள் அன்பு நண்பர் தனுஷைப் பார்க்க இந்தியா வருவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்திய ரசிகர்களே தயாராகுங்கள்.. விரைவில் சந்திப்போம்.” என்று குறிப்பிட்டுள்ளனர்.

‘தி கிரே மேன் படத்தின் அனுபவம் பற்றிப் பேசிய தனுஷ், “இந்த படம் ஒரு ரோலர் கோஸ்டர் பயணம் போன்றதாகும், இதில் ஆக்‌ஷன், டிராமா, வேகம்,பெரிய சேஸ் என பலவிதமான அம்சங்கள் உள்ளன. அற்புதமான நடிகர்களும் கலைஞர்களும் நிறைந்த இந்தப் படத்தில் ஒரு அடக்கமான கதாபாத்திரத்தில் நடிக்கக் கிடைத்ததற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.