சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா கொங்கரா இயக்கும் ‘புறநானூறு’ படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து ‘புறநானூறு படத்துக்கு கூடுதல் நேரம் தேவைப்படுகிறது’ என படக்குழு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சூர்யாவின் 44-வது படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரிக்கிறது. இது தொடர்பாக வெளியான போஸ்டரில் பின்னணியில் தீ பற்றி எரிந்துகொண்டிருக்க மரத்தில் அம்பு ஒன்று குத்தப்பட்டுள்ளது.

அதில், ‘லவ் லாஃப்டர் வார்’ (love Laughter war) என குறிப்பிடப்பட்டுள்ளது. இது படத்தின் தலைப்பா அல்லது படத்தின் ஜானரா என்பது குறித்த தெளிவில்லை.

மேலும், படத்தில் நடிக்க மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. இதற்கிடையில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ படம் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.