மும்பை நகரில் பதிவான மழை மற்றும் சாலைகளில் தேங்கி இருக்கும் மழை நீருக்கு மத்தியில் குதிரையில் பயணித்து உணவு டெலிவரி செய்துள்ளார் ஸ்விகி ஊழியர் ஒருவர். அது இணையவெளியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வைரலானது. இந்நிலையில், அவரைத் தேடி வருகிறது ஸ்விகி நிறுவனம்.

இந்தியாவில் ஆன்லைன் ஆர்டர்கள் மூலம் உணவை விநியோகித்து வரும் நிறுவனங்களில் ஒன்று ஸ்விகி. தினந்தோறும் இந்தியாவின் நகர வீதிகளில் தங்கள் வாடிக்கையாளர்களின் பசியைப் போக்க அங்கும், இங்கும் சாலையில் குறுக்கும் மறுக்குமாக பைக்கில் பறப்பார்கள் ஸ்விகி நிறுவன உணவு டெலிவரி பிரதிநிதிகள். உள்ளூர் இளைஞர்களுக்கு பார்ட்-டைம் மற்றும் ஃபுல்-டைம் பணி வாய்ப்பை வழங்குகிறது ஸ்விகி.

வெயில், மழை, புயல், காற்று என எதுவாக இருந்தாலும் இரவு பகல் பார்க்காமல் உழைத்து களைத்திருந்தாலும் வாடாமல் சிரித்த முகத்தோடு மாநகரம் தொடங்கி சிறுநகரம் வரை வசித்து வரும் பலரது பசியை போக்கும் சாமானியர்கள் எனவும் உணவு டெலிவரி செய்யும் பிரதிநிதிகளை சொல்லலாம்.

 

இந்நிலையில், மும்பையில் கடந்த சில நாட்களாக மழை பொழிந்து வருகிறது. அதனால் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி இருந்தது. அதில் வாகனங்களை இயக்க முடியாத சூழல். அத்தகைய நிலையில் ஸ்விகி நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவர் குதிரையில் சென்று தனது பணியை கவனித்துள்ளார். அதனை அந்த வழியாக சென்ற வழிப்போக்கர் ஒருவர் தனது கைபேசியில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அதோடு அதை அப்படியே சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ வைரலானது. அது பலரது கவனத்தையும் ஈர்த்தது.

அந்த வீடியோ ஸ்விகி நிறுவனத்தின் பார்வைக்கும் சென்றுள்ளது. உடனடியாக அவரை அடையாளம் காணும் வேலையில் ஸ்விகி இறங்கியுள்ளது. ஆனால் அந்த பிரதிநிதியை அந்நிறுவனத்தால் தேடிப்பிடிக்க முடியவில்லை. இறுதியில் வேறு வழி இல்லாமல் அவரை அடையாளம் காண சமூக வலைத்தளத்தை நாடியுள்ளது ஸ்விகி. அதில் அது தொடர்பான விளக்கத்தையும் கொடுத்துள்ளது. மேலும், அந்த பிரதிநிதியை அடையாளம் காண உதவும் தகவலை முதலில் அளிக்கும் நெட்டிசனுக்கு 5000 ரூபாய் சன்மானம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது ஸ்விகி.

அந்த ஊழியருக்கு ஸ்விகி நிறுவனம் கவுரவம் செய்ய வேண்டும் என நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.