சென்னை அடையாறு போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிபவர் புருஷோத்தமன். இவர் 8 முறை ‘மிஸ்டர் தமிழ்நாடு’ பட்டமும், அனைத்திந்திய காவல் பணித் திறனாய்வு போட்டியில் வெள்ளிப்பதக்கமும் பெற்றுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் நடைபெற்ற உலக ஆணழகன் போட்டிக்கான தகுதிப் போட்டியிலும் வெற்றி பெற்ற புருஷோத்தமன், வரும் அக்டோபர் 1 முதல் உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் உலக ஆணழகன் போட்டியில் கலந்து கொள்கிறார். தமிழக காவல் துறை சார்பில் இப்போட்டியில் பங்கேற்கும்முதல் காவலர் என்ற சிறப்பை இவர் பெற்றுள்ளார்.

இந்நிலையில், உஸ்பெகிஸ்தான் சென்று வருவதற்கு புருஷோத்தமன் நிதியின்றித் தவித்துள்ளார். விமான டிக்கெட், தங்குமிடம், உணவு உள்ளிட்டவைகளுக்கு குறைந்தது ரூ.3 லட்சம் செலவாகும் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், புருஷோத்தமனுக்கு ரூ.75 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். அதேபோல, டிஜிபி சைலேந்திரபாபு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கி, உலக ஆணழகன் போட்டியில் வெற்றி பெற புருஷோத்தமனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.