“இசுலாமிய கைதிகள் விடுதலைக்கு ஆதிநாராயணன் குழு, சமூக நீதிக்கு ஒரு குழு, மொத்தம் 38 குழு. நாளை இதற்கும் சேர்த்து 39-வது குழு வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கிண்டல் செய்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் தங்களை பணி நீக்கம் செய்ததைத் திரும்பப் பெறவும், பணி நிரந்தரம் செய்யக் கோரியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில், வியாழக்கிழமை (ஜன.5) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கரோனா காலத்தில் மருத்துவப் பணியாளர்கள் எவ்வளவு அர்ப்பணிப்போடு செயல்பட்டனர் என்பதை அனைவரும் அறிவர். காரணம், கரோனா நோய்த்தொற்றால் இறந்துபோன மருத்துவர்கள், செவிலியர்கள் எண்ணிக்கை அதிகம்.
தமிழகத்தின் தற்போதைய முதல்வர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, இந்த செவிலியர்கள் நிரந்தரமாக பணியமர்த்தப்படுவார்கள் என்று வாக்குறுதி அளித்திருந்தார். அதைத்தான் நிறைவேற்றுமாறு கேட்கின்றனர். ஆனால், புத்தாண்டு தினத்தில், 2472 செவிலியர்களை பணிநீக்கம் செய்திருக்கும் உத்தரவுதான் இந்தப் போராட்டத்துக்கான காரணம்” என்றார்.
அப்போது இந்தப் போராட்டத்துக்கு அரசு ஒரு ஆய்வுக்குழு நியமிக்குமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “நிச்சயமாக நியமிப்பார்கள். ஏனெனில் ஆசிரியர்களுக்கு நியமித்துள்ளனர். குழு அமைப்பதற்கான நோக்கமே, காலங்கடத்தி அந்த கோரிக்கையை நீர்த்துப் போகச் செய்வதுதான்.
இசுலாமிய கைதிகள் விடுதலைக்கு ஆதிநாராயணன் குழு, சமூக நீதிக்கு ஒரு குழு, மொத்தம் 38 குழு. நாளை இதற்கும் சேர்த்து 39-வது குழு வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. பலமுறை கூறிவிட்டேன் புழுக்கள்கூட 4 அங்குலம் நகரும், இந்த குழுக்கள் ஒரு வேலையும் செய்யாது. அது ஒரு ஏமாற்று. வெளிப்படையான கோரிக்கைக்கு எதற்கு குழு?
ஆசிரியர்கள் போராட்டத்திற்கு காரணம், திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரிதான். தற்போது நடைபெறும் இந்த செவிலியர்களின் கோரிக்கையும், இதேபோல் கடந்தமுறை போராடியபோது திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரிதான்.
எனவே, வெளிப்படையான கோரிக்கையை வைத்து போராடி வருகின்றனர். அது ஏற்கத்தக்கது. எனவே அதை ஏற்றுக்கொண்டு செயல்படுத்த வேண்டும். இதற்கு எதுக்காக குழு? இதை செயல்படுத்துவார்கள் என்று நம்புகிறோம். இல்லையென்றால் செயல்படுத்தும்வரை போராடுவோம்” என்று அவர் கூறினார்.