சென்னையில் உதவி தணிக்கை ஆய்வாளர்களுக்கான புத்தாக்கப் பயிற்சியை தொடங்கி வைத்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நிதித் துறை செயல்பாடுகளில் நாட்டிலேயே தமிழகம் முதல் மாநிலமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தமிழக கணக்கு தணிக்கை அலுவலகம் சார்பில் உதவி தணிக்கை ஆய்வாளர்களுக்கான 5 நாள் புத்தாக்கப் பயிற்சி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது. தணிக்கை துறை அலுவலர்களின் திறன், செயல்பாட்டை மேம்படுத்தவும், தணிக்கை தரத்தை உயர்த்தவும் சென்னை மண்டல பயிற்சி நிறுவனம் மூலம் இப்பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இந்த புத்தாக்கப் பயிற்சியை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: தமிழக வரலாற்றில் முதல்முறையாக இந்த பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. வருங்காலத்தில், அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து தணிக்கை அலுவலர்களுக்கான நிரந்தர பயிற்சி வகுப்புகள் நடத்துவது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.
ஒரு நாட்டின் அடிப்படை அடையாளம் என்பது அதன் சட்ட அமைப்புதான். சமுதாயம் மாற மாற, சட்ட அமைப்பும் மாறிக்கொண்டே இருக்கும்.
பொது நிறுவனங்களில் மேலாண்மை என்பது மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. அதை படிப்படியாக திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு பயன்பாட்டில் இல்லாத அரசாணைகள் கண்டறியப்பட்டு, அவற்றை சீர்திருத்தி அத்திட்டங்களையும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்திருக்கிறோம்.
அரசு மட்டுமின்றி, அனைத்து பெரிய நிறுவனங்களிலும் தணிக்கை என்பது மிகவும் அவசியம். நகைக் கடன் தள்ளுபடி என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற ஆய்வு நடத்தியபோது, பல தவறுகள் கண்டறியப்பட்டன. பல வங்கிகளில், நகை உறைகளில் நகைகளே இல்லாமல் கடன் எழுதி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்த தவறுகளை சரி செய்தபோது பல ஆயிரம் கோடி சேமிக்கப்பட்டது.
தணிக்கை துறை பிரச்சினைகளை சரிசெய்யும் முயற்சியில் நிதி துறை செயலர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் ஆர்வம், துணிச்சலுடன் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கின்றனர். தணிக்கை, நிதித் துறை செயல்பாட்டில் நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழகம் இருக்க, தணிக்கை அலுவலர்களான நீங்களும் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் தமிழக அரசின் தலைமை தணிக்கை இயக்குநர் த.ஜெய்சங்கர், நிதித் துறை செயலர் என்.முருகானந்தம், தமிழ்நாடு அரசு மின்விசை நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமை மேலாண்மை இயக்குநர் ஆர்.அம்பலவாணன், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ், மாநில முதன்மை கணக்காயர்கள் சி.நெடுஞ்செழியன், கே.பி.ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியின்போது, தீண்டாமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது