இசைஞானி இளையராஜா பார்புகழும் பாரதப் பிரதமரை அண்ணல் அம்பேத்கருக்கு ஒப்பிட்டு அவர்தம் அடிமனதிலிருந்து வெளிவந்த உணர்வுகளை இங்கே தமிழகத்தில் வெறுப்பு அரசியல் விதைக்கும் சிலர் அவரை சுடு சொற்களால் விமர்சிப்பது சரியா? என தெலங்கனா மாநில ஆளுநரும் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ப்ளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் நிறுவனம் ‘மோடியும் அம்பேத்கரும்’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சீர்திருத்தவாதிகளின் கருத்துகளும், செயல்பாட்டாளர்களின் அமலாக்கமும் என்ற தலைப்பில் புத்தகத்தின் முன்னுரையில் இசையமைப்பாளர் இளையராஜா, “பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது, சமூக நீதி விஷயத்தில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில் இசையமைப்பாளர் இளைராஜா மீது எழுந்து வரும் விமர்சனங்கள் குறித்து தெலங்கனா மாநில ஆளுநரும் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

இணையற்ற இசைஞானி இளையராஜா அவர்கள் பார்புகழும் பாரதப் பிரதமரை அண்ணல் அம்பேத்கருக்கு ஒப்பிட்டு அவர்தம் அடிமனதிலிருந்து வெளிவந்த உணர்வுகளை இங்கே தமிழகத்தில் வெறுப்பு அரசியல் விதைக்கும் சிலர் அவரை சுடு சொற்களால் விமர்சிப்பது சரியா?

கருத்து சுதந்திரம் சில கருத்துக்களுக்கு மட்டுமா? அல்லது சிலருக்கு மட்டும் தானா?, தன் கருத்தை சொல்ல இசைஞானி இளையராஜாவுக்கு முழு சுதந்திரம் உள்ளது என்பதை உரக்கச் சொல்வோம்.

விழித்துக்கொள் தமிழகமே !!!!.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.