நபார்டு கடன் உதவியை ரூ.40,000 கோடியாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார். 2023-24ம் ஆண்டிற்கான மாநில கடன் கருத்தரங்கு கூட்டம் நேற்று சென்னையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் வங்கி அதிகாரிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்  பேசியதாவது:  கிராமப்புற உள்கட்டமைப்புக்கு மாநில வங்கிகள் கடன்  வழங்குவதற்கு நபார்டு வங்கியின் பங்குகளை பாராட்டினார். சமூகத்தில்  அனைவருக்கும் தனி கவனம் செலுத்தி கடன் வழங்க வேண்டும். 2021-22ல்  மாநிலத்தில் நபார்டு கடன் உதவி ரூ.32,500 கோடியாக இருந்தது. இதனையடுத்து தற்போதைய  நிதியாண்டில் மாநில நபார் கடன் உதவி ரூ.40,000 கோடியாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

தமிழ்நாடு மண்டல அலுவலகத்தின் நபார்டு வங்கியின் தலைமைப் பொது மேலாளர்  வெங்கட கிருஷ்ணா பேசியதாவது; மாநிலத்திற்கான கடன் திறனை மதிப்பிடுவதற்காக ஆண்டுதோறும் நபார்டு நிறுவனம் மாவட்ட வாரியாக இணைக்கப்பட்ட கடன் திட்டத்தில் நிதி மற்றும் விதிமுறைகளை ஒருங்கிணைப்பதன் அடிப்படையில் தயாரிக்கப்படுகிறது.

மேலும் வங்கிகள் திட்டமிடல் மற்றும் வரவு, செலவு திட்டத்தில் கடன் திட்டங்களைத் தயாரிக்கும் வகையில் அடுத்த நிதியாண்டிற்கான அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. முன்னுரிமைத் துறையின் கடன் திறனை மதிப்பிடும் போது 2022-23ம் ஆண்டிற்கான கணிப்புகளைக் காட்டிலும் 2023-24ம் ஆண்டுக்கான கணிப்புகள் 11 சதவீதம் அதிகரித்துள்ளது.